பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் புரோஹித் நாளை டெல்லி பயணம்: மாலை பிரதமருடன் சந்திப்பு

 

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் புரோஹித் நாளை டெல்லி பயணம்: மாலை பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

சென்னை: பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதை கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகளை முன்விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த உத்தரவை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். கூடவே, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்ல இருக்கிறார். நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

7 பேர் விடுதலை அல்லது மேகதாது அணை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.