பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா முதல்வரின் சகோதரி மறுப்பு

 

பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா முதல்வரின் சகோதரி மறுப்பு

பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா முதல்வரின் சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தா மறுப்பு தெரிவித்துள்ளார்

புவனேஸ்வர்: பத்மஸ்ரீ விருதை ஏற்க ஒடிசா முதல்வரின் சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 94 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி,  ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்,  மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், நடன இயக்குனர் பிரபுதேவா, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், அந்த வகையில் ஒடிசா மாநில முதல்வர் நவின் பட்நாயக்கின் சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விருதை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீவிருதுக்கு நான் தகுதியானவர் என்று கருதி எனக்கு இந்திய அரசு விருது அறிவித்ததை நான் பெருமையாக, கவுரவமாகக் கருதுகிறேன். ஆனால், விரைவில் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் இந்த விருதை தாம் ஏற்றுக்கொண்டால், பல்வேறு தவறான யூகங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் அதனை ஏற்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மறுத்துவிட்டார். அதேசமயம், பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்நேக்ஸ் அன்ட் லேடர்ஸ், கிளிம்ஸ் ஆப் மார்டன் இந்தியா உள்ளிட்ட பல நூல்களை கீதா மேத்தா எழுதியுள்ளார். கீதா மேத்தா தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த புத்தகப் பதிப்பாளர் சோனி மேத்தாவை திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் சமீபத்தில் முன் பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.