பத்மஸ்ரீ விருது வாங்கிய மருத்துவரை மிரட்டி பணம் பறித்த பத்திரிகையாளர் கைது!

 

பத்மஸ்ரீ விருது வாங்கிய மருத்துவரை மிரட்டி பணம் பறித்த பத்திரிகையாளர் கைது!

பத்மஸ்ரீ விருது வாங்கிய மருத்துவரை மிரட்டி பணம் பறித்த பத்திரிகையாளரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்

பெங்களூரு: பத்மஸ்ரீ விருது வாங்கிய மருத்துவரை மிரட்டி பணம் பறித்த பத்திரிகையாளரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏழை மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மருத்துவ வசதிகள் போதாமல் உள்ள இன்றைய காலகட்டத்தில், இலவச மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்கு பல ஆண்டுகளாக அளித்து வருபவர் ரமண ராவ்.

இதய நிபுணர் மற்றும் பொதுநல மருத்துவரான ரமண ராவ், கடந்த 43 ஆண்டுகளாக, இலவச மருத்துவ முகாம்களை கர்நாடகாவில் உள்ள பேகூர் என்ற கிராமத்திலும், மேலும் சில சிறு கிராமங்களிலும் நடத்தி வருகிறார். 1974-ஆம் ஆண்டில் தனது முதல் கிளினிக்கை தொடங்கிய ராவ், 2010-ஆம் ஆண்டு பதம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

ramanarao

இந்நிலையில், பப்ளிக் தொலைக்காட்சியின் உள்ளீட்டு பிரிவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஹேமந்த் கஷ்யப் கடந்த 5-ம் தேதி மருத்துவர் ரமண ராவை தொடர்பு கொண்டு அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி, அன்றைய தினம் மாலையில் அவரை சென்று சந்தித்த கஷ்யப், தன்னிடம் இருக்கும் ஒரு வீடியோவை காட்டி, இது தன்னை தவிர மேலும் ஐந்து பத்திரிகையாளர்களிடம் உள்ளது. இதனை ஒளிபரப்பாமல் இருக்க வேண்டும் எனில் தனக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

அது போலியான வீடியோ என்று கூறும் ராவ், தன்னுடைய மதிப்பு குறைந்து விடும் என்ற காரணத்தால், பல்வேறு நிகழ்வுகளில் ரூ.5 லட்சம் வரை கஷ்யாப்பிற்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமயா தொலைக்காட்சியை சேர்ந்த ஊடகவியலாளர் மஞ்சுநாத் என்பவர் கடந்த 19-ம் தேதியன்று ராவை தொடர்பு கொண்டு தன்னிடமும் அந்த வீடியோ உள்ளது எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த ராவ், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

போலீசாரின் அறிவுரையின் பேரில் கஷ்யாப்பை மீண்டும் தொடர்பு கொண்ட ராவ், மஞ்சுநாத் குறித்து கூறியதுடன், வீடியோ தொடர்பாக வேறு யாரும் தன்னை மிரட்டக் கூடாது. அதற்காக நீங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார். அதன்படி, ராவின் கிளினிக்கிற்கு வந்த கஷ்யாப்பை அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். தலைமைரவாக இருக்கும் மஞ்சுநாத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆனால், அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் உள்ள தகவல்களை திரட்ட அதனை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேசமயம், முதல் முறை இந்த தவறை கஷ்யாப் செய்திருக்க வாய்ப்பில்லை என கூறும் போலீசார், அவராது செல்போனை சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.