பத்திரிகையாளரை தாக்கிய நபர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை: திமுக திட்டவட்ட மறுப்பு!

 

பத்திரிகையாளரை தாக்கிய நபர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை: திமுக திட்டவட்ட மறுப்பு!

மதிமுக சார்பில் நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின் போது பத்திரிகை நிருபரை தாக்கிய நபர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

சென்னை: மதிமுக சார்பில் நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின் போது பத்திரிகை நிருபரை தாக்கிய நபர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

கிண்டியில் இன்று காலை மதிமுக சார்பில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. மதிமுக தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக, மதிமுக, விசிக, இடதுசாரிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் சிலர் அருகில் உள்ள கடைக்கு சென்று சில பொருட்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். மேலும், அதற்கு பணம் தர மறுத்து கடைக்காரர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடையை சேதப்படுத்தியுள்ளனர். அப்போது, இந்த செய்தியை தனது செல்போனில் படம் பிடிக்க சென்ற தனியார் பத்திரிகையாளர் பிரமோத் என்பவரையும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பத்திரிகையாளர் பிரமோத்திற்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரமோத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட சுரேஷ் பாபு என்பவர், திமுகவைச் சேர்ந்தவர் என தகவல்கள் பரவியது. இந்த தகவலை திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக மீது களங்கம் கற்பிக்க உள்நோக்கத்துடன் நடத்தப்படும் பிரச்சாரங்களை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்” என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. விளக்கம்  கொடுத்துள்ளார்.