பதவியைவிட்டு காலிசெய்ய அடம்பிடிக்கும் அ.தி.மு.க நிர்வாகி! – பூட்டுப் போட்டு போராடிய பா.ம.க

 

பதவியைவிட்டு காலிசெய்ய அடம்பிடிக்கும் அ.தி.மு.க நிர்வாகி! – பூட்டுப் போட்டு போராடிய பா.ம.க

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் வேளாண் துறை செயல்படுத்தும் அட்மா திட்டத்தின் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளார்.இந்த தலைவர் பதவி என்பது ஓராண்டுக் காலம் மட்டுமே.

வேளாண் துறையின் அட்மா திட்டத் தலைவர் பதவியில் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் அ.தி.மு.க பிரமுகரை நீக்க வலியுறுத்தி பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் வேளாண் துறை செயல்படுத்தும் அட்மா திட்டத்தின் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளார்.இந்த தலைவர் பதவி என்பது ஓராண்டுக் காலம் மட்டுமே.அடுத்த ஆண்டுக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் என்று விதிகள் கூறுகின்றன.ஆனால்,அ.தி.மு.க பிரமுகர் இரண்டு ஆண்டுகளாக தலைவராக நீடித்து வருகிறார். 

admk

அவரை நீக்கிவிட்டு புதிய தலைவர் தேர்தல் நடத்த வேண்டும் என்று பா.ம.க சார்பில் வலிறுத்தப்பட்டு வந்தது.ஆனால்,அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.இந்தநிலையில் தலைவரை நீக்க வலியுறுத்தி அட்மா அலுவலகத்தில் பா.ம.க மாவட்டச் செயலாளர் உலகசாமிநாதன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.தகவல் அறிந்து வேளாண் துறை உதவி இயக்குநர் அங்கு வந்து பா.ம.க மாவட்டச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைவர் பதவியிலிருந்து அ.தி.மு.க பிரமுகர் சுரேஷை நீக்குவது தொடர்பாக உதவி இயக்குநர் எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க-வினர் உதவி இயக்குநரை உள்ளேயே வைத்துப் பூட்டுப் போட்டனர். தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அங்கு வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்தார். இதன் பிறகே பூட்டு திறக்கப்பட்டது.அதிகாரி நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.