பதவியிலிருந்து விலக தயார்: குமாரசாமி அதிரடி

 

பதவியிலிருந்து விலக தயார்: குமாரசாமி அதிரடி

முதல்வர் பதவியிலிருந்து விலக தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு: முதல்வர் பதவியிலிருந்து விலக தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக முயன்று வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் விதமாக ராம்நகர் அருகேயுள்ள ஒரு ரெசார்ட்டில் காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏக்களை தங்க வைத்துள்ளது.ஆனால் உள்கட்சி மோதலில் பாஜகவை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதாக எடியூரப்பா கூறினார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோமசேகர் எம்.எல்.ஏ. கூறுகையில்,  கடந்த 5 ஆண்டு காலம் சித்தராமையா நன்றாக ஆட்சி நடத்தினார். மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடந்தன. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எங்களை மதிப்பதும் இல்லை என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசுகையில், கூட்டணி ஆட்சியை விமர்சித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசுவது கொஞ்சமும் சரியல்ல. இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் ஆகும். இவர்கள் இப்படிபேசுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சிக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் விரும்பினால் நான் முதல்வர் பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சித்தராமையா தான் முதல்வர் என்று கூறி வருகிறார்கள். வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் அவர்களது எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். கூட்டணி அரசின் எல்லா வி‌ஷயங்களிலும் அவர்கள் (காங்கிரஸ்) தலையிட்டு வருகிறார்கள். நான் இதை அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறேன். எல்லா நேரங்களிலும் இது மாதிரி இருக்கமுடியாது. அவர்கள் விரும்பினால் நான் முதல்வர் பதவியில் இருந்து விலகி விடுகிறேன் என்றார்.