பண்டிகைகளில் புதுப்படங்கள் ரிலீஸ்: விதியை விலக்கிக் கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கம்!

 

பண்டிகைகளில் புதுப்படங்கள் ரிலீஸ்: விதியை விலக்கிக் கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கம்!

பண்டிகை தினங்களில் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய எந்த கட்டுப்படும் இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை: பண்டிகை தினங்களில் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய எந்த கட்டுப்படும் இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் வாரந்தோறும் ரிலீசாகும் புதிய திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதுப்பட ரிலீஸ் குழுவின் அனுமதி பெற்று ரிலீசாகி வருகின்றன. இந்நிலையில், கிறிச்துமஸ், பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்கேற்ப புதுப்படங்களை ரிலீஸ் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 5 திரைப்படங்கள் ரிலீசாகின்றன. தனுஷின் ‘மாரி 2’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, சிவகார்த்திகேயனின் ‘கனா’, ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகின்றன. ஒரே நாளில் 5 திரைப்படங்கள் ரிலீசானால் வசூல் பாதிக்கும் என்ற நிலை இருக்கும் பட்சத்தில், இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புதிய திரைப்படங்களின் வெளியீட்டுக் குழு கடந்த 5-ம் தேதி கூடியது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வருகிற 14ம் தேதி நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், ஒருசில திரைப்படங்கள் வெளிவரலாம் என்று பேசப்பட்டது.

tfpc

மேலும், ஒரே தேதியில் நிறைய படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சினை மற்றும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது. ஆனால், எந்தத் தயாரிப்பாளரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10-ம் தேதிகளில், தங்களது படங்கள் வெளிவர வேண்டும் என தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.

அப்படி வெளிவந்தால் தங்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது என்று முடிவெடுத்து, அவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதன் பேரில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறையில் தயாரிப்பாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களின் படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தேதிகள் தவிர்த்த மற்ற நாட்களுக்கான படங்களின் வெளியீடு குறித்த முடிவுகள், வரும் வாரம் நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்துக்குப் பின்னர் முடிவு செய்யப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.