பணவீக்கம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் கணிப்பு

 

பணவீக்கம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் கணிப்பு

சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்கா-சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை பலப்படுத்தும் நோக்கில் இருநாடுகளும் சற்று தங்களது பிடிவாதத்தை சற்று தளர்த்தியுள்ளன. அடுத்த வாரம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்துவதாக இருந்ததை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதேவேளையில் சீனாவும் அமெரிக்காவிடமிருந்து 5,000 கோடி டாலர் மதிப்புக் வேளாண் பொருட்களை வாங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தது. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்த போர் பதற்றம் சற்று தணிந்தது.

டிரம்ப்

கடந்த செப்டம்பர் மாத மொத்த விலை மற்றும் சில்லரை விலை பணவீக்கங்கள் குறித்த புள்ளிவரம் இந்த வாரம் வெளிவருகிறது. மேலும், கடந்த செப்டம்பர் மாத வர்த்தக பற்றாக்குறை தொடர்பான புள்ளிவிவரம் வரும் 15ம் தேதி வெளிவருகிறது. ரிசர்வ் வங்கியின் கடந்த நிதிக்கொள்கை  ஆய்வு கூட்டம் தொடர்பான முக்கிய செய்திகள் இந்த வாரம் வெளியாகிறது. இந்த புள்ளிவிவரங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

டி.வி.எஸ். மோட்டார்

கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் வரிசையாக வெளியிட தொடங்கி விட்டன. அந்த வகையில் இந்த வாரம் இந்துஸ்தான் யூனிலீவர், அம்புஜா சிமெண்ட், டி.வி.எஸ். மோட்டார், டெல்டா குரூப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. அவற்றை பொறுத்தும் பங்குச் சந்தைகளில் ஆட்டம் இருக்கும்.

நிர்மலா சீதாராமன்

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைமுறைகள் நாளை முதல் தொடங்குகிறது. நவம்பர் முதல் வாரம் இந்த பணிகள் நடைபெறும். அப்போது பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சகங்களின் நிதி ஆலோசகர்கள் இந்த நிதியாண்டுக்கான மறுமதிப்பீட்டை தயார் செய்வார்கள் மற்றும் அடுத்த ஆண்டின் பட்ஜெட்டுக்கான தயார் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இது தவிர நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

ரூபாய் மதிப்பு

இது தவிர இந்த வாரம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட முக்கிய புள்ளிவிவரங்கள் வெளிவருகிறது. சர்வதேச சந்தையில்  பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு, உள்நாட்டு அரசியல் நிலவரம் போன்றவற்றை பொறுத்து இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தக நிலவரம் இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.