பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்ததகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்ததகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

பணவீக்கம், நிதிநிலை முடிவுகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., எச்.டி.பி.சி. வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளை இந்த வாரம் வெளியிட உள்ளன. கடந்த நவம்பரில் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. கடந்த டிசம்பர் மாத சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கங்கள், வர்த்தக பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரங்களும் இந்தவாரம் வெளிவருகிறது. இதுதவிர பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அமெரிக்கா-சீனா இடையிலான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் வரும் 15ம் தேதி கையெழுத்தாகிறது. வேலைவாய்ப்பு உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவர உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் சற்று தணிந்தது, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதியாகி விட்டது. இந்த நிகழ்வுகளில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்பட்டால் அதன் தாக்கம் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும்.

ரூபாய் வெளிமதிப்பு

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.