பணவீக்கம் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் முன்னறிவிப்பு

 

பணவீக்கம் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் முன்னறிவிப்பு

பணவீக்கம், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாத தொழில்துறை உற்பத்தி மற்றும் தயாரிப்பு உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் நாளை வெளிவருகிறது. செவ்வாய்க்கிழமையன்று கடந்த அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தையும், வியாழக்கிழமையன்று மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தையும் மத்திய அரசு வெளியிடுகிறது. வெள்ளிக்கிழமையன்று வர்த்தக பற்றாக்குறை குறித்த தகவல் வெளிவருகிறது.

தொழில்துறை உற்பத்தி

இந்த வாரம் பிரிட்டானியா, மதர்சன் சுமி, அதானி போர்ட்ஸ் மற்றும் என்.எச்.பி.சி. உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளியாகும். இதுதவிர, இங்கிலாந்தின் ஜி.டி.பி., செப்டம்பர் மாத தொழில்துறை உற்பத்தி, அமெரிக்காவின் பணவீக்கம் புள்ளிவிவரங்கள், சீனாவின் தொழில்துறை உற்பத்தி, அன்னிய நேரடி முதலீடு, அக்டோபர் மாத சில்லரை விற்பனை உள்பட பல நாடுகளின் முக்கிய புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவர உள்ளது.

பிரிட்டானியா

இந்த முக்கிய புள்ளி விவரங்களை பொறுத்து இந்திய பங்குச் சந்தைகள் வினையாற்றும். மேலும், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.