பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையிடம் சிக்கிய பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்….

 

பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையிடம் சிக்கிய பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்….

எரிசக்தி துறையை சேர்ந்த பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் கிரிமினல் வழக்கை  இந்திய அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

கடந்த 2007-11ம் ஆண்டு வரை இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனங்களிடமிருந்து வர்த்தக ஒப்பந்தங்களை பெற்றது. இந்த ஒப்பந்தங்களை பெறுவதற்காக தனது ஏஜெண்டுகளுக்கு விதிமுறைகளுக்கு புறம்பாக கமிஷனாக ரூ.77 கோடி கொடுத்ததாக புகார் வந்தது. இதனையடுத்து சி.பி.ஐ. கடந்த ஜூலையில் வழக்கு பதிவு செய்தது.

டர்பைன் என்ஜின்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கும், பாட்னி மற்றும் அவரது நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து பாதுகாப்பு துறைக்கு ஒரு கடிதம் வந்தது. இதனையடுத்து பாதுகாப்பு துறை இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தது. இது தொடர்பாக 5  ஆண்டுகளாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. கடந்த ஜூலையில், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் அதன் இந்திய துணை நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த அசோக் பாட்னி மற்றும் அவரது நிறுவனம் ஆஷமோர் பிரைவேட் லிமிடெட், மும்பையை சேர்ந்த டர்போடெக் எனர்ஜி சர்வீசஸ் மற்றும் இதுதவிர இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது குற்றவியல் சதி மற்றும் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்தது.

அமலாக்கத்துறை

சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆரை அடிப்படையாக கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மற்றும் மற்றவர்கள் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றச்சாட்டப்பட்டுள்ள இந்த ஊழல் நடைமுறையால் வந்த பணத்தால் சொத்துக்கள் எதுவும் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.