பணமதிப்பிழப்பால் 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை: ஆய்வில் அதிர்ச்சி

 

பணமதிப்பிழப்பால் 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை: ஆய்வில் அதிர்ச்சி

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்சிகர தகவல் வெளியாகியுள்ளது

புதுதில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே, தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு 2017-2018-ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த ஆய்வு மேற்கொண்டது. இது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ ஆய்வாகும்.

ஆனால், அந்த ஆய்வு குறித்த விவரங்களை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்று காரணம் கூறி தேசிய புள்ளிவிவர ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து பி.சி.மோகனன் மற்றும் ஜே.வி.மீனாட்சி ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பதவி விலகினார்கள். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், 2017-2018-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலையிழப்பு குறித்து தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வு விவரத்தை பிஸ்னஸ் ஸ்டான்டர்டு (Business Standard) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பண மதிப்பு நீக்கத்துக்கு பிந்தைய 2017-2018-ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 2017-2018-ம் ஆண்டுகளில் இளைஞர்களுக்கான வேலையில்லாத நிலையின் அளவு இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 1972-73 ஆண்டுகளில் இருந்த அளவுக்கு வேலையில்லாத நிலை இந்த காலத்தில் அதிகரித்துள்ளது.

கிராமப் பகுதி இளைஞர்களுக்கான (15-19 வயதுக்குட்பட்டவர்கள்) வேலையில்லாத நிலை, 2011-12 ஆண்டுகளில் 5 சதவிதமாக இருந்தது. ஆனால், 2017-18-ம் ஆண்டு கால கட்டத்தில் 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப் பகுதி பெண்களுக்கான வேலையில்லாத நிலையின் அளவு 2011-12-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 4.8 சதவீதமாக இருந்தது. ஆனால், 2017-18 காலகட்டத்தில் 13.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. படித்த கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு, 2011-12-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 15.2 சதவீதமாக இருந்தது, 2017-18-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அது 17.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.