பட்டையை கிளப்பும் ‘சர்கார்’ ப்ரீ ரிலீஸ் பிசினஸ்!

 

பட்டையை கிளப்பும் ‘சர்கார்’ ப்ரீ ரிலீஸ் பிசினஸ்!

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் விநியோக உரிமைக்கான வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் விநியோக உரிமைக்கான வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவ.6ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த ஆண்டு ரிலீசாகும் திரைப்படங்களில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்கார்’, வெளியாவதற்கு முன்பே விநியோக வியாபாரத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரது திரைப்படங்களின் விநியோக உரிமத்தை பெற கடும் போட்டி நிலவுவது வழக்கம். இந்த போட்டியில் விஜய்யின் சர்கார் திரைப்படம் முன்னிலை வகிக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான உரிமத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதைத் தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனத்திடம் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ரிலீஸ் செய்வதற்கான உரிமத்தை பல்வேறு முன்னணி விநியோகஸ்தர்கள் கைப்பற்றியுள்ளனர். சர்கார் பட விநியோக உரிமத்தை பெற விநியோகஸ்தர்கள் கொடுத்திருக்கும் தொகை, விஜய்யின் முந்தைய திரைப்படங்களுக்கு கொடுத்ததை விட அதிகம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘சர்கார்’ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வியாபாரத்தில் முதலிடம் வகிப்பதால், நிச்சயம் தாங்கள் போட்ட முதலீடு திரும்ப கிடைத்துவிடும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் சன் பிக்சர்ஸின் விளம்பர யுக்தி என கூறப்படுகிறது.

இது தவிர ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் சார்ந்த சர்ச்சை பேச்சுக்கள் ரசிகர்களிடத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.