பட்டீஸ்வரம் துர்கை வழிபாடு ராகு தோஷம் போக்கும் வழிபாடு

 

பட்டீஸ்வரம் துர்கை வழிபாடு ராகு தோஷம் போக்கும் வழிபாடு

பட்டீஸ்வரம் துர்கை அம்மன்:

பட்டீஸ்வரம் துர்க்கை வழிபாடு தீமைகளை அழித்து,வெற்றியை தருகின்ற வழிபாடு ஆகும் .பரசுராமர் துர்க்கையை வழிபட்டே அமரத்துவம் எய்தினார்.போரில் வெற்றி பெற ஸ்ரீராமரும், அர்ச்சுனனும் துர்க்கையையே வழிபட்டனர்.

மகாபாரதத்தில் வன வாசம் மேற்கொள்ள தர்மரும் துர்கையையே வணங்கினார்.சிவன்,விஷ்ணு,பிரம்மன் ஆகிய மும் மூர்த்திகளின் அம்சமும்,எமன்,இந்திரன் போன்ற தேவர்களின் அம்சமும் தன்னுள் ஒருங்கே கொண்டவள் பட்டீஸ்வரம் துர்க்கை. 

 

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த  பட்டீஸ்வரம் ஆலயத்தின் கருவறையின் வடக்கு பகுதியில்,வடக்கு திசை நோக்கி, தன்னை நாடி வரும் பக்தர்களை காக்க வேண்டி,புன்னகை வழியும் திரு முகத்துடனும், மகிஷனின் தலை மீது நின்ற வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறாள் துர்க்கை .இத்திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 23 வது தலமாகும். 

இந்த ஆலயத்தின் உள்ள ராஜ கோபுரம் 7 நிலைகளை கொண்டது. ஒரு சமயம்,சிவனை நோக்கி தவம் செய்ய வேண்டி,அன்னை பார்வதி காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த சோலையினை வந்தடைந்தாள்.

அன்னைக்குக் பணி செய்ய காமதேனுவும்,அதன் புதல்விகளான பட்டி,விமலா,சபலா,நந்தினி ஆகிய நால்வரில்,பட்டி இங்கு வந்து அன்னையின் தவத்துக்கு பல பணிவிடைகள் செய்தது.

மண்ணை கொண்டு லிங்கம் செய்து, தனது கொம்புகளால் குளம் ஒன்றை உருவாக்கி, அக்குளத்தில் காவிரி, கங்கை போன்ற புண்ணிய நதிகளின் நீரை நிரப்பி அபிஷேகம் செய்ய பட்டி உதவி செய்தது. தன் மடிப் பாலையும் லிங்கத்தின் மேல் சொரிந்து ஆராதனை செய்தது.

 

பட்டியின் மட்டற்ற பக்தி கண்ட ஈசன்,அதன் முன் தோன்றி அருள் புரிந்தார்.பட்டி வழிபட்டதால் இங்கு பரமேஸ்வரன் பட்டீஸ்வரன் ஆனார்,அனைத்து உயிர்களுக்கும் ஈசனின் கருணை ஒன்றே என்பதை உணர்த்தும் திருத்தலம் இதுவாகும்.

அன்னை தன் எட்டு கரங்களில், ஒரு கரத்தை அபயஹஸ்தமாகவும், மறு கரத்தை தன் இடை மீதும் கொண்டு காட்சி அளிக்கிறாள்.மற்ற ஆறு கரங்களில் சங்கு,சக்கரம், வில்,அம்பு,வாள்,கேடயம் முதலிய ஆயுதங்கள் கொண்டு,இடப் பக்கம் நோக்கியுள்ள சிம்ம வாகனத்துடன் விளங்குகிறாள்.

 

 

மற்ற ஆலயங்களைப் போலன்றி,இங்கு அம்பிகை சாந்த சொரூபிணியாய் குடிகொண்டுள்ளாள்.காளி, துர்க்கை சன்னதிகளில் அவளது சிம்ம வாகனம் வலப் புறம் நோக்கி இருக்கும். ஆனால்,இந்த தலத்தில் இடப் புறம் நோக்கி உள்ளது.இது,அன்னையின் சாந்த சொரூபத்தை குறிப்பதாகும்.

தலப் பெருமைகள்:

ஹனுமனால் கொண்டு வரப்பட்ட லிங்கத்தை, ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து தனது பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கப் பெற்றது இங்குதான்.விசுவாமித்திரர்,தன் காயத்தையே (உடலையே) திரியாக்கி  காயத்திரி மந்திரம்  சித்திக்கப் பெற்று,பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதும் இத் தலத்தில்தான்.

மார்க்கண்டேயர் வழிபட்ட பெருமையுடையது.மூர்த்தி,தலம், தீர்த்தம் என மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத் திருத்தலத்தில்,தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இங்குள்ள அம்மனை நினைத்து வழிபடுவதாலும், மந்திர ஜெபங்களை உச்சரித்து நிந்தனை செய்வதாலும் அனைத்து தெய்வங்களையும், தேவர்களையும் வழிபட்ட பலன்கள் கிட்டும்.மரண பயம் விலகும்.

 

 

எதிரிகளின் பிடியிலிருந்து விடுதலை கிட்டும்.ராகு கால நேரங்களும், செவ்வாய்,ஞாயிறு,வெள்ளி கிழமைகளும்,அமாவாசை,பௌர்ணமி,அஷ்டமி, நவமி திதிகளும் துர்க்கா பூஜைக்கு மிக உகந்தவை. 

ராகு மற்றும் செவ்வாய் தோஷங்களால் ஏற்படும் திருமணத் தடைகள் விலக துர்க்கையை வழிபடலாம்.வீரத்தை வழங்கும் அம்பிகைக்கு குங்குமம்,செவ்வரளி,விஷ்ணுகிரந்தி போன்றவை கொண்டு செய்யும் அர்ச்சனைகளும் மிகுந்த பலன் அளிக்கும்.எலுமிச்சம் பழ மாலை துர்க்கை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. 

இத்தலத்தில் அமைந்துள்ள பைரவர்,சோழ மன்னர்களால் போற்றி வணங்கப்பட்டவர்.நோயுற்றோர்,கடன் சுமைகள் கொண்டோர்,துஷ்ட கிரகங்களால் பிடிக்கப்பட்டோர்,செய்யாத தவறுக்காக குற்றம் சுமத்தப் பட்டோர் இந்த பைரவரை வணங்கி நலம் பெறலாம்.

 

தேய்பிறை அஷ்டமி பைரவாஷ்டமி  எனப்படும். அன்றைய தினம், பைரவரை வடை மாலை சார்த்தி,தயிர் கொண்ட நைவேத்யத்துடன் சிறப்பு பூஜைகள் செய்வது மிகுந்த சிறப்பு வாய்ந்த பரிகாரம் ஆகும்.