பட்டினிச் சாவுகளைத் தடுக்க நிவாரண அறிவிப்புகளை வெளியிடுக- திருமாவளவன் 

 

பட்டினிச் சாவுகளைத் தடுக்க நிவாரண அறிவிப்புகளை வெளியிடுக- திருமாவளவன் 

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். 

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். 

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே மாதம் 3 ஆம் தேதிவரை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டிருக்கும் இரண்டாம்கட்ட முழு அடைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மக்களுக்கான நிவாரணம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. பேரிடர் காலத்தில் மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நடந்துகொள்ளும் மத்திய அரசின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

மே மாதம் 3 ஆம் தேதி வரை முழுஅடைப்பை நீட்டிப்பதாக பிரதமர் நேற்று (14.04.2020) அறிவித்தார். இன்று (15.04.2020) அது குறித்த நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தனது உரையில் குறிப்பிட்டார். புலம்பெயர் தொழிலாளர்களுடைய பிரச்சனைக்கும், ஏழை மக்களுடைய வாழ்வாதாரத்திற்கும் இன்று அறிவிப்புகள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதுபோலவே மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை, சோதனைகளை அதிகரிக்கக்கூடிய ரேபிட் டெஸ்டிங் கருவிகளின் கொள்முதல் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும் என்றும், சிறு-குறு தொழில்களைப் பாதுகாக்க அவற்றின் வங்கிக்கடன் தவணைகளை ஓராண்டுக்கு ஒத்திவைக்கும் அறிவிப்பு வெளியாகும் என்றும் மாநில அரசுகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாகவும் மத்திய அரசு அறிவிக்கும் என்றும் எதிர்பார்த்தோம்.

 

thirumavalan

 ஆனால், இன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்; பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் போன்ற அறிவுரைகளையே மீண்டும் கூறியுள்ளது. மக்கள் பட்டினி கிடந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

பட்டினியால் செத்துவிடுவோம் எனப் பயந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மும்பையிலும்,சூரத்திலும் வீதியில் இறங்கிக் குரலெழுப்பத் தொடங்கிவிட்டனர். செவிலியர்கள் தமது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி உச்சநீதி மன்றத்துக்குச் சென்றுள்ளனர். 

உலகில் மிகக் குறைவாக சோதனை செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. பத்து லட்சம் பேரில் சுமார் 150 பேருக்குத்தான் இங்கு சோதனை செய்யப்படுகிறது. பரந்துபட்ட அளவில் சோதனைகளை மேற்கொள்வதற்கு ஆர்டி-பிசிஆர் உபகரணங்களும் , ‘ஆன்டி பாடி டெஸ்ட்’ ரேபிட் டெஸ்டிங் கருவிகளும் தேவை. அவற்றை மாநில அரசுகளையும் வாங்கவிடாமல் தானும் வாங்கித் தராமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருகிறது. இதனால் நோய்த் தொற்று பரவி உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுச் சூழலை தனது அதிகார குவிப்புக்கும், சுயவிளம்பரத்துக்கும் , வாய்ச்சவடால்களுக்கும் மட்டுமே மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. மக்களைக் காப்பதற்கோ, பொருளாதாரத்தை மீட்பதற்கோ எந்தவொரு திட்டமும் அதனிடம் இல்லை. உருப்படியான ஆலோசனைகளை கூறக்கூடிய அதிகாரிகளையும் மோடி அரசு வைத்திருக்கவில்லை என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுவருகிறது. இதனால் நோய்த் தொற்றில் இறப்பவர்களைவிட பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசும் மாநில அரசும் இனியும் காலந்தாழ்த்தாமல் மக்களைப் பாதுகாப்பதற்கான போதிய நிவாரண அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.