பட்டப்பகலில் வங்கி அதிகாரியைத் தாக்கி 5 லட்சம் வழிப்பறி: நடந்தது என்ன?

 

பட்டப்பகலில் வங்கி அதிகாரியைத் தாக்கி 5 லட்சம் வழிப்பறி: நடந்தது என்ன?

பட்டப்பகலில் வங்கி அதிகாரியைத் தாக்கி வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி: பட்டப்பகலில் வங்கி அதிகாரியைத் தாக்கி வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுராந்தகத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாலசுப்பிரமணியன்(51) என்பவர் பணியாற்றி வருகிறார். அந்த நிதி நிறுவனத்தில் தமிழகம்- புதுச்சேரியைச் சேர்ந்த  நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் கடனுதவி பெற்றுள்ளனர்.

அந்தக் கடன் தொகைகளை தவணை முறையில் வசூலிப்பதற்காக மதுராந்தத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த பாலசுப்பிரமணியன், 4.75 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார். அதன்பின் மற்றொரு வாடிக்கையாளரிடம் வசூல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் தட்டாஞ்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று கொள்ளையர்கள் பாலசுப்பிரமணியத்தை வழிமறித்து அவரிடம் இருந்த பணப் பையை பிடுங்க முயன்றனர்.

ஆனால், பாலசுப்பிரமணியன் அதைக் கொடுக்காததால் கொள்ளையர்களில் ஒருவன், தான் வைத்திருந்த கத்தியால் வெட்டுக்காயம் ஏற்படாதவாறு அவரை கொடூரமாகத் தாக்கினான். இறுதியில், பாலசுப்ரமணியன் வைத்திருந்த பையை பிடுங்கிக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிச்சென்றனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர். அந்த சிசிடிவி காட்சியில், பாலசுப்ரமணியன் தாக்கப்படும்போது சுற்றியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றது அதிர்ச்சியை தந்துள்ளது.

மேலும், தீவிர விசாரணைக்குப் பின்னர் கொள்ளையர்களை பிடித்துள்ள போலிசார், அவர்களிடமிருந்து பணப்பையை மீட்டு வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.