பட்டத்து இளவரசர்கள் பதவிகளை பரிமாறிக்கொள்கிறார்கள்: ராகுல், ஸ்டாலினை வறுத்தெடுக்கும் தமிழிசை

 

பட்டத்து இளவரசர்கள் பதவிகளை பரிமாறிக்கொள்கிறார்கள்: ராகுல், ஸ்டாலினை வறுத்தெடுக்கும் தமிழிசை

பிறப்பில் சாமானியன் ஒருவர் பிரதமராக சாதிப்பதை பொறுக்காத பட்டத்து இளவரசர்கள் கூடி பதவிகளை பரிமாறிக்கொள்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: பிறப்பில் சாமானியன் ஒருவர் பிரதமராக சாதிப்பதை பொறுக்காத பட்டத்து இளவரசர்கள் கூடி பதவிகளை பரிமாறிக்கொள்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அதன் பிறகு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.  கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை பிரதமர் மோடி பார்க்க வரவில்லை. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி. தமிழகம் என்றால் அவ்வளவு அலட்சியமா? எனவே அவரை வீழ்த்துவதற்கு 21 கட்சிகள் இணைந்திருக்கின்றன. ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என பேசினார். மேலும் மோடி ஒரு சாடிஸ்ட் எனவும் விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுலை பிரதமராக்கப்போகிறாராம் ஸ்டாலின்….பிறப்பில் சாமானியன் ஒருவர் பாரதப்பிரதமராக சாதிப்பதை பொறுக்காத பட்டத்து இளவரசர்கள் கூடி பதவிகளை பரிமாறிக்கொள்கிறார்கள் ?பாவம் பழைய வரலாறுகளை மறைத்து ! நேருவின் மகளே வருக என்பார்கள் !நெருக்கடிநிலை கொண்டுவந்து எங்களை அடித்தார்கள் என்பார்கள் என பதிவிட்டு இருக்கிறார்.