’படைப்பாளியை மறக்காதீர்கள்’: வடிவேலு சர்ச்சை பேச்சு குறித்து வெங்கட் பிரபு மறைமுக சாடல்!

 

’படைப்பாளியை மறக்காதீர்கள்’: வடிவேலு சர்ச்சை பேச்சு குறித்து வெங்கட் பிரபு மறைமுக சாடல்!

சென்னை: நடிகர் வடிவேலு சர்ச்சை பேச்சு குறித்து வெங்கட் பிரபு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு இணையம் முழுக்க வடிவேலு நடித்த ‘நேசமணி’கதாபாத்திரம் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. இது குறித்து அவரிடம் கேட்க, ஊடகங்கள் பல முந்தியடித்தன. அப்படியாகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில், ’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இயக்குநருக்கு எதுவுமே தெரியவில்லை என்றும் அவரை ஒருமையில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இவரின் இந்த சர்ச்சை பேச்சு குறித்துப் பல இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து ட்வீட் ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில், ‘எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், ‘டைரக்டர் சொதப்பிட்டான்பா’ இதுதான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது!.

ஒரு ஆகச்சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரைத் தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடையச் செய்தது. இயக்குநர் சிம்புதேவனை அருகிலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் அருமையான படைப்பாளி மட்டுமில்லை. மிகச்சிறந்த மனிதர்.

ஷங்கர் அவர்களைப் பற்றி யாரும் சொல்ல அவசியமே இல்லை. அவர் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர். எல்லோரும் இங்கு மக்களை மகிழ்விக்கத்தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே. அன்பை மட்டும் வளர்ப்போம்’ என்று வடிவேலுக்கு எதிராகத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.