படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டடம்: ஆந்திர அரசு முடிவு

 

படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டடம்: ஆந்திர அரசு முடிவு

உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டடத்தை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது

அமராவதி: உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டடத்தை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு அமைக்கப்பட்டுள்ள  சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மொத்தம் 182 மீட்டர் உயரம் கொண்ட படேலின் சிலை, உலகிலேயே உயரமான சிலை ஆகும்.

இந்நிலையில், படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டடம் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகர் அமராவதியில் சுமார் 250 மீட்டர் உயரத்தில் இந்த கட்டடம் அமைக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதுதவிர, தலைமை செயலகத்திற்காக 5 கட்டட மாதிரிகளையும் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

apassembly

கட்டடத்தின் மாதிரி வடிவமைப்பில் சிறு திருத்தங்கள் செய்து, இரண்டு நாட்களில் சந்திரபாபு நாயுடு இறுதி செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட உள்ள இந்த சட்டசபை கட்டடத்தில் 2 மாடங்கள் அமைக்கப்பட உள்ளது. 80 மீட்டர் உயர்த்தில் முதல் மாடமும், 2-வது மாடம் 250 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட உள்ளது. முதல் மாடத்தில் 300 பேர் வரை அமரக்கூடிய  வசதி கொண்டதாகவும், 2-வது மாடத்தில் இருந்து அமராவதி நகர் முழுவதையும் பார்க்க கூடிய வகையிலும் அமைக்கப்படவுள்ளது. புயல், நிலநடுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் இந்த கட்டடம் அமைக்கப்பட உள்ளது. இந்த சட்டசபை கட்டடம் அமைக்கப்பட்டால் நாட்டில் மிக உயரமான கட்டடமாக இது கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

apassembly

ஏற்கனவே, ராமருக்கு 201 மீட்டரில் சிலை அமைக்க போவதாக  உத்தரப்பிரதேச அரசும், காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை அமைக்க போவதாக கர்நாடக அரசும் அறிவித்துள்ளன.