பஞ்சாப் ரயில் விபத்து: ரூ.5 லட்சம் நிவாரண உதவி; தலைவர்கள் இரங்கல்

 

பஞ்சாப் ரயில் விபத்து: ரூ.5 லட்சம் நிவாரண உதவி; தலைவர்கள் இரங்கல்

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே அருகே சௌரா பஜாரில் நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளான இன்று ராவண வதம் நிகழ்ச்சியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு அருகே ரயில்வே தண்டவாளமும் செல்கிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடந்த போது, பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அதனால் அலறியடித்துக் கொண்டு மக்கள் தண்டவாளத்தை கடந்து ஓடினர்.

பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் ரயில் வரும் சத்தத்தையும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், ரயில் தண்டவாளத்தை மறித்தும் ஏராளமான மக்கள் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. எனவே, வேகமாக வந்த ரயில், கண் இமைக்கும் நேரத்தில் மக்கள் மீது மோதிவிட்டு சென்றது. தண்டவாளத்தில் நின்றிருந்த, கடக்க முயன்ற மக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கி, சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல், பஞ்சாப் முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பஞ்சாப் ரயில் விபத்தில் பலியானவர்கள் குறித்த செய்தி இதயத்தை உருக்குகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ரயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர்சிங் நேரில் சென்று பார்வையிடுவதுடன், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூறவுள்ளார்.