பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இந்த முறை நாமம் போட்டது புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம்…. ரொம்ப இல்ல வெறும் ரூ.3,800 கோடிதான்….

 

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இந்த முறை நாமம் போட்டது புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம்…. ரொம்ப இல்ல வெறும் ரூ.3,800 கோடிதான்….

புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் ரூ.3,800 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி நிறுவனங்களுக்கு கடனை கொடுத்து விட்டு திரும்ப வாங்க முடியாமல் தவியாய் தவித்து வருகிறது. நீரவ் மோடியும் அவரது மாமா சோக்சியும் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடனை ஆட்டையை போட்டது இந்த வங்கியில்தான். இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அடுத்த தலைவலி புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் வாயிலாக வந்துள்ளது.

ஸ்டீல் ஆலை

புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனம் மொத்தம் ரூ.3,800 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் தற்போது புகார் கூறியுள்ளது. மொத்த கடனில், அந்த வங்கியின் சண்டிகர் கிளை ரூ.3,200 கோடியும், துபாய் கிளை ரூ.345 கோடியும், ஹாங்காங் கிளை ரூ.268 கோடியும் புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனத்துக்கு கடனாக தூக்கி கொடுத்தது. இந்த தகவலை பங்குச் சந்தை அமைப்பிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனத்தின் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் திவால் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளது. தற்போது திவால் நடவடிக்கை தீர்வு வாயிலாக புஷன் ஸ்டீல் நிறுவனத்தை டாடா ஸ்டீல் கையகப்படுத்தியுள்ளது. புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனத்தின் சிங்கல் சகோதரர்கள் தற்போது தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். 

டாடா ஸ்டீல்

கடந்த வாரம்தான் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் புஷன் பவர் அண்டு ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர்கள், தணிக்கையாளர்கள், மற்றும் தன்னிச்சையான இயக்குனர்களுக்கு எதிராக பங்குகள் மற்றும் நிதியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்டதாக 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.