பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்! சித்துவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அமரீந்தர் சிங்!

 

பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்! சித்துவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அமரீந்தர் சிங்!

நவ்ஜோத் சிங் சித்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருந்த அமைச்சரவை ஒதுக்கீடு பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.

பஞ்சாப்பில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நவ்ஜோத் சிங் சித்து மாநில அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். சித்து எப்போதும் எதையாவது பேசி சர்ச்சை கிளப்புவது வாடிக்கை. சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் ஆதரவாக பேசி நாட்டு மக்களிடம் வாங்கி கட்டி கொண்டது குறிப்பிடத்தக்கது.

அமரீந்தர் சிங்

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால் முதல்வர் அமரீந்தர் சிங் சித்துவை கண்டித்தார். ஆனாலும் சித்து அடங்கியது மாதிரி தெரியவில்லை.  இந்நிலையில் கடந்த மாதம் 6ம் தேதி பஞ்சாப் அமைச்சரவை அமரீந்தர் சிங் மாற்றி அமைத்தார். அப்போது சித்துவிடம் இருந்த உள்ளாட்சி துறை பறித்து விட்டு அவருக்கு வேறு துறையை ஒதுக்கினார்.

இதனால் கோபம் அடைந்த சித்து புதிய துறையை ஏற்க மறுத்து விட்டார். மேலும், காங்கிரஸ் தலைமையிடம் இது குறித்து பேசினார். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. அதேபோல் அமரீந்தர் சிங்கும் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு சித்து அனுப்பினார். ஆனால் முதல்வர் அமரீந்தர் சிங் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பஞ்சாப் அரசியலில் பரபரப்பு நிலவியது.

சித்து, ராகுல்

இந்நிலையில் தற்போது சித்துவின் ராஜினாமா கடிதத்தை அமரீந்தர் சிங் ஏற்றுக் கொண்டார். மேலும், அம்மாநில கவர்னர் வி.பி. சிங் பாத்னோரும் சித்துவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்.