பசு சிறுநீர், சாணத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும்….. அசாம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்டுபிடிப்பு….

 

பசு சிறுநீர், சாணத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும்….. அசாம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்டுபிடிப்பு….

கொரோனா வைரஸ் காற்றுவழியாக பரவும் நோய். பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தி அதனை குணப்படுத்த முடியும் என அசாம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை உலகம் முழுவதுமாக கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி விட்டது. கொரோனா வைரசுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்க மருத்துவ துறையை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை

மருத்துவ விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை குணப்படுத்த தீவிரமாக உழைத்து வரும் வேளையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனா வைரஸை பசு சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தி குணப்படுத்தி விடலாம் என தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் ஹஜோ சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுமன் ஹரிப்பிரியாவுக்குதான் இந்த சிந்தனை உதித்துள்ளது.

சுமன் ஹரிபிரியா

சுமன் ஹரிப்பிரியா இது தொடர்பாக கூறியதாவது: கொரோனா வைரஸ் காற்றுவழியாக பரவக்கூடிய நோய். பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தி கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்க முடியும். முன்பு முனிவர்கள் பசு சாணத்தை பயன்படுத்தி யாகம் செய்தனர். அதனால் யாகம் நடத்திய 5 கி.மீட்டர் சுற்றளவில் காற்று சுத்திகரிக்கப்பட்டது. அதேபோல் சீனாவிலும் பசு சாணத்தை பயன்படுத்தி யாகம் மேற்கொண்டால் அந்நாட்டின் காற்றை சுத்தப்படுத்தி விடலாம். நம் அரசும் இதனை முயற்சிக்கலாம்.

பரவும் கொரோனா வைரஸ்

பண்டைய காலங்களில் முனிவர்கள் பசு சிறுநீர், பால் மற்றும் தேன் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கிய பஞ்சாமிருதம் அவர்களின் எல்லா நோய்களையும் குணமாக்கியது. மேலும் அவர்களால் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடிந்தது. பசு சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்தலாம். குஜராத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாட்டு சாணம் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பசுவின் சிறுநீரால் உருவாக்கப்பட்ட பஞ்சாமிருதமும் (மருந்து) நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.