பசியால் துடித்த குழந்தைகள்…தலைமுடியை விற்று பசியை தீர்த்த தாய்: உதவிக்கரம் நீட்டிய மனிதர்கள்!

 

பசியால் துடித்த குழந்தைகள்…தலைமுடியை விற்று பசியை தீர்த்த தாய்:  உதவிக்கரம் நீட்டிய மனிதர்கள்!

5 லட்சத்தை எட்டியதால் செல்வம்  கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர்கள்  செல்வம்- பிரேமா தம்பதி. இவர்களுக்கு 3 ஆண்  பிள்ளைகள் உள்ள நிலையில் செல்வம் வீமனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார். அந்த செங்கல் சூளை  உரிமையாளரிடம் கடன் வாங்கிய செல்வம் அதை அடைக்க பல  இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன்காரர்கள் கழுத்தை நெறிக்க கடன் தொகை  5 லட்சத்தை எட்டியதால் செல்வம்  கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

ttn

இதனால் பிரேமா 3 குழந்தைகளை வைத்து கொண்டு பரிதவிக்க வறுமை வாட்டி  வதைத்தது. கடன்காரர்கள் பிரேமாவுக்கு நெருக்கடி கொடுக்க, பிரேமாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால்  அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.  உயிர்  காப்பாற்றப்பட்டாலும் பசியால் வாடும் பிள்ளைகளை பார்க்கும் போது பிரேமா கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருந்தார்.விரக்தியின் உச்சத்திற்கே சென்ற பிரேமா,  தனது தலைமுடியை விற்க முடிவு செய்துள்ளார். அதன்படி தலைமுடியை 150 ரூபாய்க்கு எடைக்கு போட்டு அதில் வந்த பணத்தின் மூலம் குழந்தைகளின் பசியை போக்கியுள்ளார். 

ttn

இந்நிலையில் பிரேமாவின் வறுமையை அறிந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர் இதுகுறித்து தனது  பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட பலரும் பிரேமாவின் வறுமையை போக்க தங்களால் முயன்றயளவு உதவியுள்ளார். இதன் மூலம் கிடைத்த ரூபாய் ஒரு லட்சத்தை பிரேமாவிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாலா, ‘பிரேமா இனி தவறான முடிவு எடுக்க மாட்டார். இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை வந்துவிட்டது. இத்தனை அன்புக்கும் என்ன மறுமொழி சொல்வதென்று பிரேமாவிற்கு புரியவில்லை. அவர் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வருகிறது. ஒரு சொட்டு கண்ணீர் ஓராயிரம் நன்றிகளுக்கு சமம். அத்தனையும் நண்பர்களே உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். நீண்ட நம் உதவிக்கரங்களும், அன்பும் அந்த பெண்ணுக்கு புது தைரியத்தை கொடுத்திருக்கிறது. உடனடியாக கழுத்தை நெரிக்கும் பிரச்சினைகளை மட்டும் தீர்த்து வைக்க இப்போது வந்திருக்கும் பணம் போதும். இனி நண்பர்கள் பணம் அனுப்ப வேண்டாம். பிரேமாவும் அதை எதிர்பார்க்கவில்லை. இனி ஒரு வண்டி வாங்கி கொடுத்தால் போதும் அண்ணா பழம் காய்கறிகள் விற்று மீதி கடனை நானே சம்பாதித்து கட்டிக்கொள்கிறேன் என்கிறார். அவர் தன்னம்பிக்கைக்கு ஒரு பெரிய சல்யூட், அவருக்கு தன்னம்பிக்கையை கொடுத்த உங்களுக்கும் ஒரு பெரிய சல்யூட். இனி பிரேமா பிழைத்துக்கொள்வார். இனி அவருக்கு தேவை, நாங்கள் இருக்கிறோம் சகோதரி என்கிற வார்த்தைகள் மட்டுமே..!!’ என்று பதிவிட்டுள்ளதோடு, பிரேமாவின் குழந்தைகள் படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.  

பிரேமாவின் குடும்ப சூழலை பற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் ராமன்,  பிரேமாவிற்கு விதவை உதவி தொகை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

“மனிதம் உள்ள ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாராட்டி கொள்ளும் தருணம் இது…”