பங்குச் சந்தையில் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 190 புள்ளிகள் வீழ்ச்சி..

 

பங்குச் சந்தையில் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 190 புள்ளிகள் வீழ்ச்சி..

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 190 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 500  புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டது. பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்பு, சவுதி எண்ணெய் உற்பத்தியை குறைக்கபோவதாக அறிவித்ததால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை உயர்ந்தது. இது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் மளமளவென சரிவு கண்டது. இருப்பினும் வர்த்தகத்தின் இடையே ரூபாய் வெளிமதிப்பு உயர்ந்தது போன்ற காரணங்களால் சரிவு சிறிது குறைந்தது. இருப்பினும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.

என்.டி.பி.சி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ, பவர்கிரிட், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக்மகிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 903 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,371 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.122.74 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.52 ஆயிரம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.10 புள்ளிகள் குறைந்து 31,371.12 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 42.65 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,196.55 புள்ளிகளில் முடிவுற்றது.