பங்குச் சந்தையில் ரூ.3.60 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிந்தது…

 

பங்குச் சந்தையில் ரூ.3.60 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிந்தது.

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடனே் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிவு கண்டது. மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார தொகுப்புகள் முதலீட்டாளர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என தெரிகிறது. ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது இது  போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

டி.சி.எஸ்.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டி.சி.எஸ். மற்றும் இன்போசிஸ் ஆகிய 2  நிறுவனங்களின் பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 28 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்டஸ்இண்ட் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 568 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,744 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 167 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.119.02 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று ஒரே நாளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.60 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,068.75 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 30,028.98 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 313.60 புள்ளிகள் சரிந்து 8,823.25 புள்ளிகளில் முடிவுற்றது.