பங்குச் சந்தையில் ரூ.1.97 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி…

 

பங்குச் சந்தையில் ரூ.1.97 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிவு கண்டது. பங்குகளில் முதலீடுகளை செய்வதை காட்டிலும் தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோகார்ப், சன்பார்மா, எல் அண்டு டி மற்றும் பவர்கிரிட் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 775 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,580 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 163 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.121.73 லட்சம் கோடியாக சரிவடைந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.97 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 535.86 புள்ளிகள் சரிந்து 31,327.22 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 159.50 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,154.40 புள்ளிகளில் முடிவுற்றது.