பங்குச் சந்தையால் 5 நாட்களில் ரூ.2.52 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…

 

பங்குச் சந்தையால் 5 நாட்களில் ரூ.2.52 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்தத்தில் சரிவை சந்தித்தது. மேலும், முதலீட்டாளர்களுக்கு ரூ.2.52 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக சரிவடைந்தது. கடந்த அக்டோபரில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சியும் பின்தங்கியது. கடந்த நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை படுமந்தமாக இருந்தது. அமெரிக்கா-சீனா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில், ஹாங்காங் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து சீனாவின் கோபத்தை கிளறியது.

வாகன விற்பனை

இந்திய ரிசர்வ் வங்கியின் டிசம்பர் மாத ஆய்வறிக்கை கூட்டம் இந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியில் (ரெப்போ ரேட்) எந்தவித மாற்றங்களையும் செய்யவில்லை. மேலும், இந்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 5 சதவீதமாக குறைத்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.19 லட்சம் கோடியாக குறைந்து இருந்தது. கடந்த நவம்பர் 30ம் தேதியன்று நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.71 லட்சம் கோடியாக உயர்ந்து இருந்தது. ஆக, கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.52 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ்

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சென்செக்ஸ் 348.66 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,445.15 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 134.55 புள்ளிகள் சரிவு கண்டு 11,921.50 புள்ளிகளில் முடிவுற்றது.