பங்குச் சந்தைகளை குதறி எடுத்த கொரோனா வைரஸ்…. ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் வீழ்ச்சி….

 

பங்குச் சந்தைகளை குதறி எடுத்த கொரோனா வைரஸ்…. ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் வீழ்ச்சி….

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தகம் படு பயங்கரமாக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் உலக பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தன. பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர். சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

மும்பை பங்குச் சந்தையில் இன்று 232 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,037 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 132 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.102.13 லட்சம் கோடியாக வீழ்ச்சி கண்டது. ஆக, இன்று ஒரே நாளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ரூ.13.96 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,934.72 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 25,981.24 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1,135.20 புள்ளிகள் இறங்கி 7,610.25 புள்ளிகளில் நிலைகொண்டது.