பங்குச் சந்தைகளை ஆட்டி படைத்த கரடி! காணாமல் போன முதலீட்டாளர்கள் பணம்!

 

பங்குச் சந்தைகளை ஆட்டி படைத்த கரடி! காணாமல் போன முதலீட்டாளர்கள் பணம்!

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் சரிவை சந்தித்தது. பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது.

 பங்குச் சந்தை

அமெரிக்காவின் ஆளில்லா டிரோனை ஈரான் நேற்று வீழ்த்தியது. இந்த தகவலால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. கடந்த சில வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதனால் பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தனர். இது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பலத்த சரிவு ஏற்பட்டது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், யெஸ் வங்கி, மாருதி, கோல் இந்தியா, சன்பார்மா, பார்தி ஏர்டெல் உள்பட 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், 1,333 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 1,167 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 149 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

பங்குச் சந்தை வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று 1,50,47,206.54 கோடியாக குறைந்தது. நேற்று பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,51,36,313.43 கோடியாக உயர்ந்து இருந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.89 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. 

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 407.14 புள்ளிகள் குறைந்து 39,194.49 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 107.65 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,724.10 புள்ளிகளில் முடிவுற்றது.