பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தம்! சென்செக்ஸ் 196 புள்ளிகள் குறைந்தது

 

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தம்! சென்செக்ஸ் 196 புள்ளிகள் குறைந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 196 புள்ளிகள் குறைந்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பது, வேலைவாய்ப்பு நிலவரம், வாகன விற்பனை மந்தம் இதுதவிர நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாததால் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இதுதவிர சர்வதேச கரன்சி பத்திரம் வெளியீடு தொடர்பாக மத்திய அரசு மறுயோசனை செய்யவில்லை என்று தகவலும் பங்குச் சந்தையின் சரிவுக்கு காரணமானது.

வீழ்ச்சி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.சி.எல்.டெக்னாலஜிஸ், இண்டஸ்இந்த் வங்கி, டி.சி.எஸ்., இன்போசிஸ், ஸ்டேட் வங்கி ஆகிய 6 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, பஜாஜ் ஆட்டோ, மாருதி, டாடா ஸ்டீல்  மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 803 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,662 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. இருப்பினும், 132 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.48 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.88 லட்சம் கோடியாக இருந்தது.

வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 196.42 புள்ளிகள் இறங்கி 37,686.37 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 95.10 புள்ளிகள் குறைந்து 11,189.20 புள்ளிகளில் முடிவுற்றது.