நேற்று சுஜித் : இன்று பவளவள்ளி தொடரும் துயரம்

 

நேற்று சுஜித் : இன்று பவளவள்ளி தொடரும் துயரம்

நேற்று 3 வயது சிறுமி செப்டிக் டாங்க் குழியில் விழுந்து இறந்துள்ளது. இவ்வாறு தொடரும் குழந்தைகளின் மரணம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. 

தூத்துக்குடியில் கடந்த 28 ஆம் தேதி வீட்டினுள் இருந்த தண்ணீர் சேகரிக்கும் டிரம்மில் விழுந்து ரேவதி சஞ்சனா என்ற குழந்தை உயிரிழந்தது. அதனையடுத்து, நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து இருந்த சுஜித்தின் உயிரிழப்பு. அதன் பின் கிருஷ்ணகிரியில் 10 மாத குழந்தை குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று 3 வயது சிறுமி செப்டிக் டாங்க் குழியில் விழுந்து இறந்துள்ளது. இவ்வாறு தொடரும் குழந்தைகளின் மரணம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. 

செப்டிக் டாங்க் குழி

பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டை என்னும் பகுதியில் வசித்து வரும் மகாராஜன்- பிரியா எனும் தம்பதிக்கு 3 வயதான பவளவள்ளி என்னும் பெண் குழந்தை இருக்கிறது. குழந்தையின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால், நேற்று மதியம் மருத்துவ மனைக்குச் சென்ற பிரியா குழந்தையை அழைத்துச் செல்லாமல் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லி பவளவள்ளியை வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார். இவர்களின் வீட்டு வாசலில் செப்டிக் டாங்க் குழி தோண்டப் பட்டு உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அதில் விழுந்துள்ளார். பக்கத்து வீட்டார் யாரும் இதனைக் கவனிக்க வில்லை. குழிக்குள் இருந்த மழைநீரில் மூழ்கிய பவளவள்ளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

செப்டிக் டாங்க் குழி

மருத்துவமனையிலிருந்து திரும்பிய தம்பதியினர், குழந்தையைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது, குழந்தை செப்டிக் டாங்க் குழிக்குள் இறந்து மிதந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இது குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.