நேற்று அப்துல்லா, இன்று மெகபூபா முப்தி: காவலில் இருக்கும் அரசியல் தலைகளை சந்திக்கும் கட்சியினர்

 

நேற்று அப்துல்லா, இன்று மெகபூபா முப்தி: காவலில் இருக்கும் அரசியல் தலைகளை சந்திக்கும் கட்சியினர்

காஷ்மீரில் காவலில் இருக்கும் மெகபூபா முப்தியை இன்று அவரது மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் சந்தித்து பேச உள்ளனர்.

மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முந்தைய நாளில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் என ஆயிரக்கணக்கான பேரை காவல் துறையினர் காவலில் வைத்தனர்.

பரூக் அப்துல்லா

தற்போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை பாதுகாப்பு படையினர் படிப்படியாக விடுவித்து வருகின்றனர். இருப்பினும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதேசமயம் அவர்களை சந்தித்து பேச அவரது கட்சியினருக்கு காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து நேற்று தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 15 தலைவர்கள் தங்களது கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா மற்றும் ஓமர் அப்துல்லாவை சந்தித்து பேசினர்.

ஓமர் அப்துல்லா

இந்நிலையில் இன்று மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் இன்று  தங்களது கட்சி தலைவர் மெகபூபா முப்தியை சந்தித்து பேச உள்ளனர். ஸ்ரீநகரில் காவலில் வைக்கப்பட்டுள்ள முப்தியை அவர்கள் இன்று சந்தித்து பேச உள்ளனர். இது குறித்து மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் பிர்தோஸ் தக் கூறுகையில், மெகபூபா முப்தியை சந்திக்க காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்கிடம் மக்கள் ஜனநாயக கட்சி அனுமதி கேட்டு இருந்தது. அரசு நிர்வாகம் அனுமதி அளித்ததையடுத்து, கட்சியின் பொதுசெயலாளர் வேத் மகாஜன் தலைமையில் பிரதிநிதிகள் திங்கட்கிழமை (இன்று) மெகபூபா முப்தியை சந்தித்து பேச உள்ளனர் என தெரிவித்தார்.