நேர்மையான அமைச்சரை நியமியுங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

 

நேர்மையான அமைச்சரை நியமியுங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

உயர்கல்வித்துறைக்கு நேர்மையான, தூய்மையான ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: உயர்கல்வித்துறைக்கு நேர்மையான, தூய்மையான ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வந்த தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 15 பேருக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் உரிய தகுதிகள் இருந்தும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க  அமைச்சர் தரப்பில் மிகப்பெரிய அளவில் கையூட்டு வசூலிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மேட்டூர் உறுப்புக் கல்லூரியில் பணி நிலைப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவருமே 12 ஆண்டுகளுக்கு முன் முறைப்படி தகுதித் தேர்வு எழுதி தான் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தான் தற்காலிக உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். என்றாவது ஒருநாள் நிரந்தர உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டால் தங்களுக்கு பணி நிலைப்பு செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்து வந்தனர். ஆனால், 2014-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் சுவாமிநாதன் இருந்த போது, தற்காலிக உதவிப் பேராசிரியர்களை நீக்கம் செய்து விட்டு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க முயன்றார். அதை எதிர்த்து தற்காலிக உதவிப் பேராசிரியர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 2015- ஆம் ஆண்டில் சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். அப்போதே அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், அப்போதிருந்த துணைவேந்தர் சுவாமிநாதன் ஒரு பணியிடத்திற்கு ரூ.30 லட்சம்  கையூட்டு கொடுத்தால் மட்டுமே பணி நிலைப்பு செய்ய முடியும் என்று கூறி விட்டார். அதைத்தொடர்ந்து  நடந்த சட்டப்போராட்டங்களில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தரப்பு நியாயத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலு முன்வந்த நிலையில், இதில் குறுக்கிட்ட உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் 15 தற்காலிக உதவிப் பேராசிரியர்களும் தலா ரூ.15 லட்சம் வழங்கினால் தான் பணி நிலைப்பு ஆணை வழங்க முடியும் என நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட பேரத்திற்கு பிறகு 11 பேர் தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.65 கோடி கையூட்டு வழங்கியதாகவும், மீதமுள்ள நால்வர் தங்களுக்கு நீதிமன்ற ஆணைப்படி தான் பணி நிலைப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காக பணம் தர முடியாது என்றும் கூறிவிட்டதாகவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பணி நிலைப்பு ஆணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களும்  தலா ரூ.15 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் தரப்பு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.  

 பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரி 12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது ஆகும். மேட்டூரில் புதிய கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்று 2006-ஆம் ஆண்டில் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரும், பா.ம.க. தலைவருமான ஜி.கே.மணி கோரிக்கை விடுத்த போது, புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகக் கூறி அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. எனினும் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி தான்கடும் வாக்குவாதம் செய்து மேட்டூரில் பெரியார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியை தொடங்க அனுமதி பெற்றார். அதன்பின் அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி ஆகிய இடங்களில் பெரியார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புமிக்க உறுப்புக் கல்லூரிகளில் இன்றையத் தேவைக்கு ஏற்ப புதியப் பாடப்பிரிவுகளைத் தொடங்கி அவற்றை விரிவு படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தால், அது பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும். மாறாக உயர்நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி பணி நிலைப்பு ஆணை பெற்றவர்களிடம் கூட அதற்காக கையூட்டு தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதன் மூலம் உயர்கல்வித்துறையை உயர் ஊழல் துறையாக கே.பி.அன்பழகன் மாற்றி விட்டார்.

தமிழகத்தில் உயர்கல்வித்துறை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை தூய்மையானதாகவே இருந்தது.    தமிழக பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தகுதியும், திறமையும் நிறைந்த கல்வியாளர்களின் கைகளில்  இருந்தன. அதனால் தமிழகத்தில் உயர்கல்வி வளர்ச்சியடைந்தது.. ஆனால், அண்மைக்காலங்களில் குறிப்பாக கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு தகுதியும், திறமையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் துணைவேந்தர் பதவி என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. அது தான் உயர்கல்வித்துறை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதிலும் குறிப்பாக உயர்கல்வி அமைச்சராக அன்பழகன் பொறுப்பேற்ற பிறகு தனியார் பொறியியல் கல்லூரிகளில் தலித் மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு தலா ரூ.10,000 கையூட்டு வாங்கும் அளவுக்கு உயர்கல்வித்துறை சீரழிந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. உயர்கல்வித்துறை  என்றாலே உயர் ஊழல் துறை என்று கூறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறையை சீரமைத்து அது இழந்த பெருமையையும், கவுரவத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான முதல் நடவடிக்கையாக உயர்கல்வித்துறைக்கு நேர்மையான, தூய்மையான ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும். மேட்டூர் கல்லூரி பணி நிலைப்பு ஊழல் உட்பட  கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன் அத்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.