நெல் ஜெயராமன் மறைவு: பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

 

நெல் ஜெயராமன் மறைவு: பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்

சென்னை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த உழவரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான நெல் ஜெயராமன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதற்கும் நெல் ஜெயராமன் ஆற்றிய பணிகள்  ஈடு இணையற்றவை. பயன்பாட்டில் இல்லாத நெல் வகைகளை மீட்டெடுத்து அவற்றை அதிக அளவில் சாகுபடி செய்ய வைப்பதற்காக இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியவர். யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட 169 வகையான பாரம்பரிய நெல்வகைகளை இதுவரை அவர் மீட்டெடுத்துள்ளார்.

நம்மாழ்வார் மூலம் எனக்கு அறிமுகமான நெல் ஜெயராமன் பலமுறை எனது தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளார். மீட்டெடுக்கப்பட்ட பல பாரம்பரிய நெல் வகைகளை அவர் எனக்கு வழங்கியுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழாவை நடத்தி மீட்டெடுக்கப்பட்ட நெல் ரகங்களில் தலா ஒரு கிலோவை உழவர்களுக்கு வழங்கி, அடுத்த ஆண்டு அதே நெல் வகையில் 4 கிலோவை வாங்கி நெல் ரகத்தை பரப்பியவர். மேலும் பல நெல் ரகங்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிர்க்கொல்லி நோய் அவரை நம்மிடமிருந்து இரக்கமில்லாமல் பிரித்திருக்கிறது.

 சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரை கடந்த சில நாட்களுக்கு முன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் விரைவில் நலம் பெற்று வந்து நெல் மீட்பு பணிகளை தொடருவார் என நம்பியிருந்த நேரத்தில் அவரது மரணச் செய்தி வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது.

இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் நெல் ஜெயராமன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வேளாண் சமுதாயத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.