நெல் ஜெயராமன் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: முத்தரசன் இரங்கல்

 

நெல் ஜெயராமன் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: முத்தரசன் இரங்கல்

நெல் ஜெயராமன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: நெல் ஜெயராமன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரம்பரிய “நெல் விதை” வகைகளை சேகரித்து, பாதுகாத்து, வளர்த்தெடுத்து வந்த “நெல்” ஜெயராமன் இன்று (06.12.2018) அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கட்டிமேடு கிராமத்தில், ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ”நெல்” ஜெயராமன் இயற்கை வழி வேளாண்மையில் பேரார்வம் கொண்டவர்.

காலம் சென்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர் அவர்களின் இளைஞர் குழுவில் பயிற்சி பெற்ற ”நெல்” ஜெயராமன், தனது அயராத உழைப்பால் பாரம்பரிய நெல் விதைகளை தேடி சேகரித்தவர். 170 க்கும் மேற்பட்ட பாரம்பரிய ”நெல்” விதைகளை கண்டறிந்து, பரிசோதித்து அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து, ஆண்டுதோறும் நெல் விழா நடத்தி விவசாயிகளுக்கு  விலையில்லாமல் விதைகளை வழங்கி வந்தவர். இவரது தன்னிகரற்ற அர்பணிப்பு சேவை பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் பெற்றது.

பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வந்தவரின் ஆரோக்கியத்தை தோல்புற்று நோய் தாக்கியது. சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தும் பலனின்றி அவரை பறிகொடுக்க நேரிட்டது ஆற்றொணாத் துயரமாகும். நெல் ஜெயராமனின் மறைவுக்கும், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.