நெருங்கும் ஆஸ்திரேலிய தேர்தல்: உள்துறை அமைச்சகத்தை எதிர்க்கட்சி கலைக்குமா?

 

நெருங்கும் ஆஸ்திரேலிய தேர்தல்: உள்துறை அமைச்சகத்தை எதிர்க்கட்சி கலைக்குமா?

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் ஒருவேளை எதிர்க்கட்சியான லேபர் கட்சி வெற்றி பெரும் பட்சத்தில் உள்துறை கலைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் ஒருவேளை எதிர்க்கட்சியான லேபர் கட்சி வெற்றி பெரும் பட்சத்தில் உள்துறை கலைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு தரப்பிலான விவாதங்களை உருவாக்கி வருகின்றது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஆளும் லிபரல் கட்சியால் புதிதாக உருவாக்கப்பட்ட உள்துறை அமைச்சகம், தற்போதைய எதிர்க்கட்சியான லேபர் கட்சி அடுத்ததாக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அதனை  கலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லேபர் கட்சிக்குள்ளும் இதுதொடர்பான விவாதங்கள் நடைபெறுவதாக கூறப்படுக்றது.

இது தொடர்பான கேள்வியினை எதிர்க்கட்சி தலைவரான பில் ஷார்டனிடமே பத்திரிகையாளர்கள் முன்வைத்திருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் புதிதாக வந்துள்ளோம் என்பதற்காக லிபரல் கட்சியினர் கொண்டு வந்த அனைத்தையும் கிழித்தெறிய மாட்டோம். மாற்ற வேண்டும் என்பதற்காக மாற்ற முடியாது என்றார்.

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகத்துக்கு நூறாண்டுகளுக்கு முந்தைய அரசியல் வரலாறு இருக்கின்றது. பல்வேறு துறைகளை கையாளும் துறையாக உள்ள இத்துறை, பல்வேறு மாற்றங்களையும் கண்டுள்ளது. 1901-ஆம் ஆண்டு முதல் இருந்த இத்துறை 1932-ல் கலைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1977-ல் உருவாக்கப்பட்டது, மீண்டும் 1988-ல் கலைக்கப்பட்டது. மீண்டும் 2007-ல் தோன்றி 2013-ல் மறைந்தது. கடைசியாக, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான ஆட்சியில் மீண்டும் உருவாக்கப்பட்டது. அப்போது குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறையின் அமைச்சராக இருந்த பீட்டர் டட்டன், புதிதாக உருவாக்கப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார். 

கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட உள்துறையில், ‘குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சி, சமூக சேவைகள்’ உள்ளிட்ட பல துறைகள் சேர்க்கப்பட்டன. இத்துடன் தேசியப் பாதுகாப்பு, ஆஸ்திரேலிய காவல்துறை, ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை தொடர்பிலான பல அதிகாரங்களும் இத்துறையுடன் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.