நெடுவாசலில் பின்வாங்கியது போல் மத்திய அரசு பின்வாங்கி ஓட நேரிடும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

 

நெடுவாசலில் பின்வாங்கியது போல் மத்திய அரசு பின்வாங்கி ஓட நேரிடும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் மத்திய அரசு பின்வாங்கியது போல் பின் வாங்க நேரிடும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் மத்திய அரசு பின்வாங்கியது போல் பின் வாங்க நேரிடும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 3 இடங்களில் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தில்லியில்  பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கப்படவுள்ள 55 மண்டலங்களில் 3 தமிழகத்தில் அமைந்துள்ளன.  இவை குறித்த விவரம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை முதல் மண்டலம், பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை இரண்டாவது மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது மண்டலமும் அமைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இவற்றில் முதல் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும், மற்ற இரு மண்டலங்களுக்கான உரிமங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில் முதல் மண்டலத்தில் 4 இடங்கள், மற்ற இரு மண்டலங்களில் தலா 10 இடங்கள் என மொத்தம் 24 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும் என்றும் தெரியவந்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனம் ஆவது உறுதி.

புதிதாக அமைக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து மீத்தேன் எடுக்கப்படாது  என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், கச்சா எண்ணெய், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் வளங்களும் எடுக்கப்படும் என்று தெரிகிறது. காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் எனது கேள்விகளுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை பதிலளித்திருந்தார்.ஆனால், அதற்கு முற்றிலும் விரோதமான வகையில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் வளங்களை காவிரி பாசன மாவட்டங்களில் எடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்; இதை ஏற்க முடியாது.

காவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாகும். அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையை ஒழித்து விட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. மீத்தேன் எரிவாயு, ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட வளங்களை தோண்டி எடுக்கும் பூமியாக காவிரி பாசன மாவட்டங்கள் மாற்றப்பட்டால் உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்படும். அப்படி ஒரு நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது.

காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதை செய்யாத மத்திய அரசு காவிரி பாசன மாவட்டங்களை சீரழிப்பதற்கான மீத்தேன் மற்றும் ஹைட்ரோக் கார்பன் திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை நிச்சயமாக செயல்படுத்த முடியாது. இதை மத்தியஅரசு உணர்ந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கவுரவமாக திரும்பப்பெற வேண்டும்.

மாறாக, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கட்டாயப்படுத்தி திணிக்க நினைத்தால் அது நடக்காது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டங்களின் காரணமாக, அத்திட்டத்தை  செயல்படுத்த முடியாமல் மத்திய அரசு எவ்வாறு பின்வாங்கியதோ அதே போன்ற நிலை இத்திட்டங்களுக்கும் ஏற்படும் என்றார்.