நீண்ட காலத்துக்கு லாக்டவுன்?….. பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மோசமாக இருக்கும்…. உலக வங்கி எச்சரிக்கை

 

நீண்ட காலத்துக்கு லாக்டவுன்?….. பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மோசமாக இருக்கும்…. உலக வங்கி எச்சரிக்கை

நீண்ட காலத்துக்கு லாக்டவுனை நீடித்தால், கணிப்புகளை காட்டிலும் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என இந்தியாவை உலக வங்கி எச்சரிக்கை செய்துள்ளது.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தகதியில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தொற்று நோயான கொரோனா வைரஸ் மூலமாக பொருளாதாரத்துக்கு பெரிய அடி விழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய அளவில் 21 நாள் லாக்டவுனை அறிவித்தது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். பால், பல சரக்கு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியமான கடைகள் மட்டுமே இயங்கின. இதனால் நாடு முழுவதும் தொழில்துறை முடங்கியது. மேலும் சுற்றுலா உள்ளிட்ட சேவை துறைகளின் வர்த்தகமும் முற்றிலுமாக நின்று போனது.

இந்திய பொருளாதாரம்

இந்த 21 நாள் லாக்டவுனால் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பல மாநிலங்கள் மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே லாக்டவுனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து விட்டன. அதேசமயம் லாக்டவுனை நீண்டகாலத்துக்கு நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரிக்கை செய்துள்ளது.

உலக வங்கி

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் மற்றும் மற்றும் நடைமுறையில் உள்ள நாடு தழுவிய லாக்டவுன் காலத்தை பொறுத்து இந்த நிதியாண்டில் (2020 ஏப்ரல்-2021 மார்ச்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்கும். அதேசமயம் தற்போதைய லாக்டவுன் நீண்டகாலத்துக்கு நீடித்தால், கணிப்புகளை காட்டிலும் பொருளாதார தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும். 2 முதல் 4 மாத லாக்டவுன் காலம், தயாரிப்பு மற்றும் சேவைகளின் உற்பத்தியை பாதியாக குறைத்து விடும் என தெரிவித்துள்ளது.