நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!-முழு விவரம்

 

நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!-முழு விவரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட சிறப்புக்குழு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது

புதுதில்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் வெளியிட்டார். தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

congress manifesto

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட சிறப்புக்குழு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. 

congress manifesto

தொடர்ந்து பேசிய ராகுல், எங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு  வாக்குறுதி கூட பொய்யாக இருக்க கூடாது என்பதே எங்களின் நோக்கம். தேர்தல் அறிக்கையில் நட்டு மக்களுக்காக பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

**காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்.

**விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 

**அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது.

**மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

** “நியாய்” (NYAY) எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் வகையில் “நியாய்” திட்டம் இருக்கும்.

**100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

**2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்.

**2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

**தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

**இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை.

**புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

**தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும். ஜிஎஸ்டி முறைக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டு வரப்படும். ஆதார் சட்டம் மாற்றியமைக்கப்படும்.

**ரஃபேல் ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.

**இலங்கையுடான மீனவர் பிரச்னை தீர்க்கப்படும்.

**அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா முதல் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும்.

**நிதி அயோக் கலைக்கப்பட்டு மீண்டும் திட்டக்குழு கொண்டு வரப்படும்.

**1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வி வழங்கப்படும்.

**பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறை மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

**பாதுகாப்பு படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் (AFSPA) சட்டப்பிரிவு மாற்றியமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் வாசிங்க

நடிகர் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்தவர் மகேந்திரன்; நடிகர் ரஜினி உருக்கம்!