நீட் தேர்வு 2019-ல் திடீர் மாற்றம்; மாணவர்கள் அதிருப்தி!

 

நீட் தேர்வு 2019-ல் திடீர் மாற்றம்; மாணவர்கள் அதிருப்தி!

நாடு முழுவதும் நீட் தேர்வு வருகிற 5-ம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும்

சென்னை: நீட் தேர்வுக்கான தேர்வு மையங்களை மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

neet

இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வை சிபிஎஸ்சி நடத்தி வந்த நிலையில், நடப்பாண்டுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்கான அறிவிப்பாணை வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. தொடர்ந்து, நாடு முழுவதும் நீட் தேர்வு வருகிற 5-ம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும் தேர்வானது, பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது.

neet

நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் கொடுக்கப்பட்டு தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில், திடீரென தேர்வு மையங்களை மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. www.ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாற்றப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்த தகவலை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., ஈ-மெயில் மற்றும் வாய்ஸ் மெசேஜ் மூலமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இதர தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

neet

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் நுழைவுச் சீட்டில் பிழைகள் இருந்தன. அதன்பின்பு அவற்றில் திருத்தும் செய்து வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நாளை மறுநாள் தேர்வு நடைபெறும் சூழலில், தேர்வு மையங்களை மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் குழப்பதையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் போது தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் தேர்வு எழுதும் சில மாணவர்களுக்கு மட்டுமே வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.