நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நிதர்சனத்தோடு ஏற்று கொள்வோம்- சரத்குமார்

 

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நிதர்சனத்தோடு ஏற்று கொள்வோம்- சரத்குமார்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மோடி இன்று உரையாடுவதாக இருந்த நிலையில் இன்று 4 ஆவது முறையாக நாட்டு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, “கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். கொரோனா இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை தளர்வுக்கு பிறகு கொரோனா  தொற்று அதிகமானால் மீண்டும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கபடும்.  கொரோனாவை கட்டுபடுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாகியுள்ளது. வெளியில் வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முக கவசங்களை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்றார். 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு அதாவது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடி

இந்நிலையில் இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகளவில், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள், வளர்ந்த நாடுகளிலும் கூட அஜாக்கிரதையின் காரணமாக கொரோனாவால்   பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. அத்தகைய ஒரு சூழ்நிலை நமது நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கெனவே 24.03.2020 அன்று 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இன்றுடன் 21 நாட்கள் நிறைவடைந்திருந்தாலும், தற்போது வைரஸின் தீவிரம் உச்சத்தில் உள்ளதால்  ஊரடங்கு  நீட்டிப்பு  அவசியம்  என்ற  அடிப்படையில்,   மே – 3 ந்தேதி வரை மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்திருப்பது, தவிர்க்கமுடியாத ஒன்று என்ற யதார்த்தத்தை மக்கள் புரிந்து கொண்டு நிதர்சனத்தை ஏற்று கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஏப்ரல் 20 வரை கடுமையாக இருக்கும் என்பதையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால்  உயிர்கள் விலைமதிப்பற்றது. அதை காக்கும் கடமை அரசுக்கு உள்ளது. எப்படி மருந்து கசப்பாக இருந்தாலும் நோயை குணமாக்குகிறதோ, அதுபோல  ஊரடங்கு நடவடிக்கைகள் கசப்பு மருந்தாக இருந்தாலும், அது நமக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நமது அன்றாட வாழ்க்கையின்  சிக்கல்களையும், சவால்களையும்  ஒரு காலகட்டத்தில் நம்மால் சரிசெய்ய இயலும் என்ற நம்பிக்கையுடன் கொரோனா சங்கிலியை உடைத்திட  மன உறுதி கொண்டு ஒற்றுமையை கடைபிடிப்போம். 

sarathkumar
பாதிப்பு நம்மால் பிறருக்கும், பிறரால் நமக்கும் ஏற்படக்கூடாது  என்கிற நல்லெண்ண அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கை கடுமையான நடவடிக்கையாக கருதாமல்,  என்னென்ன நடவடிக்கைகள் முயற்சிகள் அரசாங்கம் மேற்கொள்கிறதோ அது நம்முடைய நன்மைக்காகவும், நமது உற்றார் உறவினர்கள், நண்பர்கள், சமூகத்தினரின் நன்மைக்காகவும் என்பதை மனமுவந்து ஏற்று  கவனமுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியையும், பிற இன்னல்களையும் பற்றிக் கவலைப்படாமல், இந்தியா மேற்கொண்டிருக்கும் இத்தகைய நடவடிக்கையை, உலகின் பிற நாடுகள் பாராட்டுவதோடு, இதுபோன்ற நடவடிக்கையை தாங்களும் முன்கூட்டியே பின்பற்றியிருந்தால், நோய் பெரிய அளவில் பரவாமலும்,  அதிக எண்ணிக்கையிலான மனித உயிர்களின் இழப்பையும் தடுத்திருக்கலாமே என்றும் அந்நாடுகளை சிந்திக்கவும் வைத்திருக்கின்றன என்பது நமக்கு பெருமிதமான ஒன்றாகும்.

இந்த கடுமையான துன்பத்திலிருந்து மக்கள் சற்று தளர்வுற தமிழக அரசு மத்திய அரசிடம் உரிய நிதி பெற்று ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பொருளாதார, உதவியினை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். விழித்திருப்போம்! விலகியிருப்போம்! வீட்டிலிருப்போம்! உள்ளங்களால் ஒன்றுபட்டு கொரோனாவை எதிர்ப்போம்!” என தெரிவித்துள்ளார்.