நீடிக்கும் இழுபறி: தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் முதல் விருப்ப மனு விநியோகம்!

 

நீடிக்கும் இழுபறி:  தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் முதல் விருப்ப மனு விநியோகம்!

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இயங்கி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான அ.தி.மு.க, நேற்றைக்கு முந்தைய நாள் பா.ம.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்குத் தொகுதி பங்கீட்டை உறுதி செய்தது. அ.தி.மு.கவுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தார். அந்த சந்திப்பில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், உடல்நலம் விசாரிக்க வந்ததாக பியூஸ் கோயல் தெரிவித்தார்

இதனால் அதிமுக-பாஜக உடனான பேச்சுவார்த்தையில் இழிபறி உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 

dmdk

இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் நம் இந்திய நாட்டில் பதினேழாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.௦௦ மணியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 06.03.2019 புதன்கிழமை மாலை 5மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இணைய பாமக அளிக்கப்பட்ட மாதிரியே தங்களுக்கும் தொகுதி பங்கீட்டில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற தேமுதிக தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதால் கூட்டணியில் இழுபறி நிலவுவதாகக் கூறப்படுகிறது.