நீங்க மறந்தாலும் வருமான வரி துறை மறக்காது.. எஸ்.எம்.எஸ். வந்துடும்! கணக்குல கோட்டைய விட்டு விடாதீங்க!

 

நீங்க மறந்தாலும் வருமான வரி துறை மறக்காது.. எஸ்.எம்.எஸ். வந்துடும்! கணக்குல கோட்டைய விட்டு விடாதீங்க!

அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை நீங்கள் மேற்கொண்டு இருந்தால், அதனை வருமான வரி கணக்கில் காட்டும் படி உங்களுக்கு வருமான வரித் துறை குறுஞ்செய்தி அனுப்பும் என தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் குறிப்பிட்ட பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது வாடிக்கையாளர்கள் கட்டாயம் பான் எண் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதாவது வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய, ரூ.10 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான சொத்துக்களை வாங்கும் போது, ரூ.1 லட்சத்துக்கும் அதிக மதிப்பில் பங்குகள் பரிவர்த்தனை (வாங்கினாலும், விற்றாலும்) உள்பட 18 வகையான நிதி பரிவர்த்தனைகளின் போது ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயம். 

சி.பி.டி.டி.

இந்நிலையில், பான் எண் குறிப்பிடுவது கட்டாயமான 18 விதமான பரிவர்த்தனைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் மேற்கொண்டு இருந்தாலும் அந்த பரிவர்த்தனையை வருமான வரி கணக்கில் காட்ட வேண்டும் என உங்கள் செல்போனுக்கு விரைவில் வருமான வரித்துறையிடம் இருந்து எஸ்.எம்.எஸ். வர உள்ளது. இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி.சி. மோடி கூறியதாவது:

வருமான வரி கணக்கு தாக்கல்

பான் எண் குறிப்பிடுவது கட்டாயமான 18 விதமான பரிவர்த்தனைகளில் ஏதாவது ஒன்றை மேற்கொண்டு இருந்தாலும் அந்த பரிவர்த்தனையை வருமான வரி கணக்கில் காட்ட வேண்டும் என சம்பந்தப்பட்ட நபருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இது நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்தியாவில் தற்போது 44.57 கோடி பேரிடம் பான் கார்டு உள்ளது. இதில் 25 கோடி பேர் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர்.