நீங்க தாமரை பட்டனை அழுத்துவது, பாகிஸ்தானில் அணு குண்டை போடுவதாக அர்த்தம்- பா.ஜ.க. தலைவர்

 

நீங்க தாமரை பட்டனை அழுத்துவது, பாகிஸ்தானில் அணு குண்டை போடுவதாக அர்த்தம்- பா.ஜ.க. தலைவர்

வாக்குப்பதிவின் போது நீங்க தாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தானில் அணு குண்டை போடுவதாக அர்த்தம் என தேர்தல் பிரசாரத்தில் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் நேரடி மோதல் உள்ளதாக கருதப்படுகிறது.

தாமரை

பா.ஜ.க. ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல மத்திய அமைச்சர்கள் மகாராஷ்டிராவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானே பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப் பிரதேச துணை முதல்வரும், பிரபல பா.ஜ.க. தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா தேர்தல் பிரசசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

அணு குண்டு

மக்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால், தானாகவே பாகிஸ்தானில் அணு குண்டு விழுவதாக அர்த்தம். தயவு செய்து பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் மற்றும் நமது கட்சியை மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு முறை வெற்றியடைய செய்யுங்கள். எதிர்வரும் தேர்தலில் தாமரை கட்டாயம் மலரும் என்று நான் நம்புகிறேன். பனைமரம், சைக்கிள் அல்லது வாட்ச்யிலோ லட்சுமி தேவி அமர மாட்டாள். மாறாக தாமரையில்தான் அவள் அமருவாள். தாமரை மலரால்தான் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. வளர்ச்சியின் குறியீடு தாமரை. இவ்வாறு அவர் பேசினார்.