’நீங்க எங்களை அடிச்சாலும் தண்ணி கிடைக்காது’…அண்டப்புளுகு அமைச்சர் வேலுமணி அவர்களே கேக்குதா?

 

’நீங்க எங்களை அடிச்சாலும் தண்ணி கிடைக்காது’…அண்டப்புளுகு அமைச்சர் வேலுமணி அவர்களே கேக்குதா?

சென்னை சிட்டி லிமிட்டுக்குள் ஓரளவாவது தண்ணீர் கிடைக்கிறது. குடிநீர் வாரியம் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குத் தண்ணீரை எப்படியாவது கொண்டுசேர்க்கிறது.

’சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் என்பது இல்லவே இல்லை. அது எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் புரளி’என்று அமைச்சர் வேலுமணி அண்டப்புளுகு விட்டுக்கொண்டிருக்க, முகநூல் பக்கப் பதிவுகள் பலவற்றைப் படிக்கும்போது நெஞ்சு கனக்கிறது. இதோ ஒரு சொட்டு சாம்பிள்…

 

…சென்னை சிட்டி லிமிட்டுக்குள் ஓரளவாவது தண்ணீர் கிடைக்கிறது. குடிநீர் வாரியம் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குத் தண்ணீரை எப்படியாவது கொண்டுசேர்க்கிறது. ஆனால் ஆதம்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. வீடுகளுக்குத் தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. குடிநீர் லாரிகள் மூலம் சில ஸ்லம்கள் மற்றும் சில பகுதிகளுக்குத் தண்னீர் விநியோகிக்கப்படுகிறது. அதற்கும் குடத்துக்கு இவ்வளவு என பணம் வசூலித்துவிடுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் முன்பு பதிவு செய்தால் 13 நாட்களுக்குள் தண்ணீர் லாரியில் கொண்டு வந்து ஊற்றப்படும். ஆனால் இப்போது ஆன்லைனில் பதிவு செய்தால், தண்ணீர் கிடைப்பதற்கு 30-35 நாட்கள் ஆகும் என்கிறார்கள் குடிநீர் வாரிய கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை.

இன்று குடிநீர் வாரிய அலுவலகத்தில் சென்று வாக்குவாதம் செய்தபோது, அங்கிருந்த ஒரு ஊழியர் அழாத குறையாக ”எங்களுக்கே ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் தான் தண்ணீர் கிடைக்கிறது. அதைத்தான் நாங்கள் பகிர்ந்து அளிக்கிறோம். இப்போது கிடைக்கும் இந்த அளவு தண்ணீரை வைத்து டேங்கர் லாரிகள் மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்ய முடியாது. நீங்க எங்கள அடிச்சாலும் தண்ணி கிடைக்காது” என பாவமாகக் கூறினார். ஒரு ஊழியரால் என்ன செய்து விட முடியும்?

அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் தனியார் லாரிகளில் நீர் வாங்கி ஊற்றிக்கொள்கிறார்கள். முன்பு, இருந்த விலையைவிட இப்போது தனியார் டேங்கர் லாரி தண்ணீர் விலை இரு மடங்காகிவிட்டது. அனைத்து மக்களாலும் தண்னீருக்கு 5,000ரூபாய் செலவு செய்வதெல்லாம் சாத்தியமில்லை. அதுவும் பலர் இப்போதுதான் குழந்தைகளுக்கு ஸ்கூல் மற்றும் காலேஜ் ஃபீஸ் கட்டிவிட்டு ரசமும் அப்பளமும் வைத்து சாப்பிட்டுக் காலத்தை ஓட்டுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களின் கஷ்டமெல்லாம் மக்களைச் சென்று சந்தித்துப் பேசாத, மக்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ளாத, கமிஷன் மட்டுமே லட்சியம் என்று வாழும் வேலுமணி போன்ற அடிப்படை அறிவில்லாத அமைச்சர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு மக்களோடு மக்களாக வாழ வேண்டும். இவர்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமித்ஷா மற்றும் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள், சுய மரியாதையைத் தொலைத்து.

ஜெயலலிதா என்கிற மாய பிம்பம் முட்டாள்களை அமைச்சர்களாக்கி நம்மை அழ வைத்துச் சென்றுள்ளது.

-முகநூலில் நாச்சியாள் சுகந்தி.