நீங்கள்,எடப்பாடிக்கு போனாலும் ஏற்காட்டுக்கு போனாலும் மறக்கக்கூடாத பெயர் ஹோட்டல் உஷாராணி!

 

நீங்கள்,எடப்பாடிக்கு போனாலும் ஏற்காட்டுக்கு போனாலும் மறக்கக்கூடாத பெயர் ஹோட்டல் உஷாராணி!

காக்காபாளையத்துக்கு முன்னால் இடது புறமாக திரும்பும் இளம்பிள்ளை போகும் சாலையில் வேம்படிதாளம் என்கிற இடத்தில் இருக்கிறது ஹோட்டல் உஷாராணி!

சேலத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் இருக்கிறது காக்கா பாளையம். காக்காபாளையத்துக்கு முன்னால் இடது புறமாக திரும்பும் இளம்பிள்ளை போகும் சாலையில் வேம்படிதாளம் என்கிற இடத்தில் இருக்கிறது ஹோட்டல் உஷாராணி!

வழியெல்லாம் விவசாய நிலங்கள்தான். அங்கங்கே மரத்தடியில் கையால் சுற்றும் மெஷின் வைத்து  கரும்புச்சாறு விற்கிறார்கள். மதிய வேளையில் வேம்படித்தளம் போனீர்கள் என்றால் ஹோட்டல் உஷாராணியை நெருங்க நெருங்க காட்சி மாறும், நிழல் கண்ட இடத்திலெல்லாம் விலையுயர்ந்த் சொகுசு கார்களை நிறுத்திவிட்டு காருக்குள் வைத்தும், கார் பானெட்மேல் இலை போட்டும் ஆட்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்.

usharani hotel

அருகில் உள்ள தோட்டங்கள்,தோப்புக்களில் எல்லாம் திறந்த வெளி உணவகம் போல் மனிதர்கள் குடும்பம், குடும்பமாகவும், நண்பர்கள் கூட்டமாகவும் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கலாம். காரணம் ஹோட்டல் உஷாராணிதான்.

அதிகம் போனால் ஒரு இருபது பேர் அமர்ந்து சாப்பிடலாம். ஒரு குடும்பம் நடத்தும் ஹோட்டல். சமையல் செய்வது பரிமாறுவது எல்லாம் அவர்களே. பெரிய அனுபவமெல்லாம் கிடையாது. பாரம்பரிய உணவகமெல்லாம் கிடையாது. குடும்பத்தில் மூத்த சகோதரர் பெருமாள் லாரி டிரைவராக இந்தியா முழுவதும் சுற்றி விதவிதமாக சாப்பிட்ட அனுபவத்தில் துவங்கி இன்று சேலம் பகுதியில் புகழ்பெற்று நிற்கிறது.

usharani hotel

உள்ளே உட்கார்ந்து சாப்பிட உங்களுக்கு இடம் கிடைத்துவிட்டால் அது உங்கள் அதிர்ஷ்ட தினம்.பெரிய இலை போட்டு, மட்டன், சிக்கன் காடை என்று விதவிதமாக அள்ளி வைத்து உபசரிக்கிறார்கள். ஒவ்வொரு ஐட்டத்துக்கும் தனித்தனி விலையெல்லாம் இல்லை. தலைக்கு முந்நூறு ரூபாய்.

இலையில் சோறும் விதவிதமான குழம்பு வகைகளும் கறிகளும் வந்துகொண்டே இருக்கும். நீங்களாக போதுமய்யா சாமி என்று ரசத்துக்கு மாறினால் தான் உண்டு. அப்போதும் ரசம் சோற்றுக்கு சைட்டிஷ்ஷாக மூளை வருவல் வந்து நிற்கும்.

usharani hotel

இத்தனைக்கும் இந்த உஷாராணியின் ஸ்பெஷலே பிரியாணிதான். சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணியும் பார்சல்களாக பறந்துகொண்டே இருக்கின்றன. மதியம் ஒரு வேளை மட்டும் தான் இயங்குகிறது. ஆனால் எந்த விதமான செயற்கை மசாலாக்களோ நிறமூட்டிகளோ இல்லாமல் கையால் அறைத்த மசாலாவில் சமைக்கப்படும் உணவு வகைகள் தான் உஷாராணியின் புகழை உயர்த்திப் பிடிக்கின்றன.

இங்கிருந்து இருபது கிலோமீட்டர்தான் எடப்பாடி. அதனால் அங்கே போகிற கொடி கட்டிய கார்களும் இங்கே எட்டிப் பார்த்து விட்டுத் தான் போகின்றன. ஏற்காட்டில் சூட்டிங் வைத்தால் மதியம் உஷாராணி பிரியாணி வேண்டும் என்கிற நடிகர்களும் இயக்குநர்களும் இருப்பாதாகச் சொல்கிறார் பெருமாள் நாயுடு.

usharani hotel

நம்ம ஊர் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரின் தொலைபேசி எண்கள் பெருமாளின் மொபைலில் வரிசைகட்டி நிற்கின்றன. அடுத்தமுறை அந்தப்பக்கம் போனால் உஷாராணிக்கு விசிட் செய்ய மறந்து விடாதீர்கள்.