நிவாரணம் வழங்குவதில் அரசு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவில்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

 

நிவாரணம் வழங்குவதில் அரசு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவில்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

நிவாரணம் வழங்குவதில் நல்லதொரு ஒருங்கிணைப்பை  அரசு ஏற்படுத்தி இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: நிவாரணம் வழங்குவதில் நல்லதொரு ஒருங்கிணைப்பை  அரசு ஏற்படுத்தி இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்  பெருமளவிற்கு மரங்கள் விழுந்த காரணத்தால், அவற்றில் உள்ள தழைகள் அழுகி எங்கும் துர்நாற்றம் வீசுகின்றது. குளம், வாய்க்கால் மற்றும் ஆறுகளில் உள்ள தண்ணீர் மிக மோசமடைந்து துர் நாற்றம் வீசுவதுடன், தண்ணீர் கறுப்பு நிறத்திற்கு மாறிவிட்டது இந்நிலையில் வேறு வழியின்றி மக்கள் இதனைதான் பயன்படுத்தி வருகிறார்கள். மெயின் ரோட்டில் உள்ள மரங்கள் அகற்றப்பட்ட போதும் முழுமையாக சுத்தம் செய்யப்படவில்லை உள் கிராமங்களில் அப்புறப்படுத்தம் பணிகளை தொடங்கவே இல்லை.

சிறு, குறு விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ள நிலையில், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் மரம், செடி, கொடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டால் விரைவில் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.  சேறும், சகதியும் உள்ள இடங்கள் மற்றும் குளம் வாய்க்கால் போன்ற பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் தெளிப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு, பன்றி, எலிக் காய்ச்சல் தொடரும் நிலையில், தற்போது புயல் பாதித்த மாவட்டங்களில் கொசுப் பெருக்கம் அதிகமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் கொசு மருத்து அடிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு, பாய், ஜமுக்காளம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியிருந்தார். அவ்வாறு எங்கும்  வழங்கவில்லை, இதன் காரணமாக ஈரம் நிறைந்த இடங்களில் மக்கள் படுக்கை வசதியின்றி அல்லல் பட்டு வருகின்றனர். முதலமைச்சரின்  அறிவிப்புகள் செயல்பட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  இடிந்த வீடுகள், மேற் கூரைகளுக்கு மூடுவதற்கு தார்பாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளதை உடனே செயல்படுத்திட வேண்டும் 

இயல்பு நிலை திரும்பும் வரையில் முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றக்கூடாது. அவர்களை பாதுகாக்க உரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒருங்கிணைப்புகள் இன்றி பல்வேறு குளறுபடிகளும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. 

பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற உயரிய நல்நோக்கத்துடன் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நல்லெண்ணம் படைத்த தனிநபர்கள் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளின் சார்பில் ஏராளமான உணவுப் பொருட்கள், உடைகள், மெழுகுவர்த்தி, தீ பெட்டி போன்ற பொருட்களுடன் வருவது வரவேற்று, பாராட்டத் தக்கதாகும். 

இவைகளை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீராக கிடைக்க செய்திட அரசு எவ்வித ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.  இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மெயின்ரோடு வழியாக சென்று எதிரில் படுபவர்களிடம் மட்டுமே பொருட்களை வழங்கி செல்கின்றனர்.

இதன் விளைவாக உள் கிராம மக்களுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை தங்களுக்கு ஏதேனும் பொருட்கள் தருவார்களா?  என கைகளை ஏந்தி பரிதாப கரமான முறையில் சாலைகள் இரு புறமும் நிற்பது மிகுந்த வேதனையைத் தருகின்றது. இவ்வாறு சாலையில் நின்ற தலைஞாயிறு ஒன்றியம், அகர நீர்மூலை காலனிதெருவைச் சேர்ந்த நடராஜன் மனைவி அமுதா (50), சிவக்குமாரின் மனைவி சுமதி (35), செல்வராஜ் மனைவி ராஜகுமாரி (40) ராமமூர்த்தி மனைவி சரோஜா (35) ஆகியோர் கார் மோதியதில் மேற்கண்ட நான்கு பெண்கள் மரணமுற்றுள்ளனர், மேலும் சரோஜாவின்  மகன் மணிகண்டன் என்ற இளைஞர் கடுகாயமுற்று ஆபத்தான நி¬¬¬யில் மருத்துவமனையில் உள்ளார். 

நிவாரணம் வழங்குவதில் நல்லதொரு ஒருங்கிணைப்பை  அரசு ஏற்படுத்தி இருந்தால் உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்காது.  உயிர் இழந்த நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ள இளைஞரின் குடும்பத்திற்கும், புயல் பாதிப்பில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி வழங்குவது போன்று இவர்களுக்கும் வழங்க அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.