நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்:முத்தரசன் வலியுறுத்தல்

 

நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்:முத்தரசன் வலியுறுத்தல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் தாக்குதல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசின் நிவாரண நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும். 5 நாட்களை தாண்டியும் பெரும் பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் குடிநீர் விநியோகம் உட்பட பல அத்தியாவசியத் தேவைகள் தடைபட்டிருக்கின்றன.

 கஜா புயல் நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநில அரசு உடனடியாக ரூ 1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது போதுமானதல்ல. வழங்கப்படும் நிவாரண உதவிகளும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. ஒரு கிராமத்தில் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வீதம் 5000 கிலோ அரிசி வழங்க வேண்டும். ஆனால், இதில் பாதியளவு (2500 கிலோ) அரிசி வழங்கி அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்களை அலுவலர்கள் நிர்பந்திக்கிறார்கள். இதே போல் தேவையான அளவில் பாதி அளவு மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மோதல் நிலை ஏற்படுகிறது. இந்த மோதல் போக்கை உருவாக்கும் அரசின் நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடில்லாமல் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 விவசாயிகளுக்கு நிலவுடைமையின் அடிப்படையில் சிறு,குறு விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டிருப்பதால், பெரும் பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தென்னை மரங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் மறுவாழ்வு அமைத்துக் கொள்ளும் நம்பிக்கை அளிக்கவில்லை இதனால் தற்கொலை செய்து கொள்ளும் துயரம் நிகழ்ந்துள்ளது. ஒரத்தநாடு ஒன்றியம், சோழகன்குடிகாடு தென்னை விவசாயி சுந்தரராஜன் வாழ்க்கை இழந்த துயரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புயலால் சேதமடைந்த வீடுகளில் முழுமையாக சேதமடைந்தது, பகுதியளவு சேதமடைந்தது என பாகுபடுத்தி பார்ப்பது சரியல்ல. தொகுப்பு வீடுகள், கூரைவீடுகள், கான்கிரீட் வீடுகள் பெருமளவில் சேதமடைந்திருக்கின்றன. இவைகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவி;ல்லை. எனவே அரசு நிவாரண உதவிகளை மறுபரிசீலனை செய்து அனைவருக்கும் உதவிட வேண்டும்.

 படகுகள், வலைகள் உள்ளிட்ட உடைமைகளை இழந்து நிற்கும் மீனவர்களுக்கு, வேலையிழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்  வழங்கப்பட வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரையிலும் குடிநீர், பால், மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்  கொள்கிறது என கூறியுள்ளார்.