நிலவுக்கு ராக்கெட் அனுப்புவது வேலையில்லாத இளைஞர்களுக்கு உணவளிக்காது- மோடியை தாக்கிய ராகுல் காந்தி

 

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவது வேலையில்லாத இளைஞர்களுக்கு உணவளிக்காது- மோடியை தாக்கிய ராகுல் காந்தி

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவது வேலையில்லா இளைஞர்களுக்கு உணவளிக்காது என பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. லத்தூரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி  பேசுகையில் கூறியதாவது: இந்த நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது இதை அவர்கள் (பா.ஜ.க.) பேச மாட்டார்கள். தங்களுக்கு எதிர்காலம் இல்லை என இளைஞர்கள் சொல்கிறார்கள். 

வேலைவாய்ப்பின்மை

அதேசமயம் அந்த பக்கம் மோடி சந்திரனை நோக்கி பாருங்கள் என சொல்கிறார். இந்தியா ராக்கெட் அனுப்பியது. அது நல்லதுதான். இஸ்ரோவுக்கு காங்கிரஸ் நிதி கொடுத்தது. இரண்டு நாளில் ராக்கெட் அங்கு செல்லவில்லை. பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது மற்றும் அதன் பலனை நரேந்திர மோடி எடுத்துக் கொண்டார். நிலவுக்கு ராக்கெட் அனுப்புவது இளைஞர்களுக்கு உணவு அளிக்காது.

மோடி

அவர்கள் (பா.ஜ. அரசு) இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விட்டனர். அவர்கள் காஷ்மீர், சந்திரன் ஆகிய விஷயங்கள் குறித்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையான பிரச்னை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஊடகங்களில், வேலையின்மை மற்றும் வறட்சி பற்றி நீங்கள் படிக்கவோ கேட்கவோ மாட்டீர்கள். ஆனால் மோடி கார்பெட் பூங்காவில் இருப்பதையும், சந்திரன் குறித்து பேசுவதையும்  கேட்பீர்கள். ஊடகங்களில் மக்களின் பிரச்னைகளை நீங்கள் காண மாட்டீர்கள். மோடியும், அமித் ஷாவும் மக்களின் கவனத்தை உண்மையான பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.